
கும்பகோணம் அருகே ஆடிட்டரை மிரட்டி ரூ. 1 கோடி பறித்ததாகக் காவல் ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குலசேகரநல்லுாரில் கொள்ளிடம் பாலம் விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை அரசு கையப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது. இதில், கும்பகோணம் ராமசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் வி. ரவிச்சந்திரனுக்கு (68) சொந்தமான 80 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர், இந்த நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெட்டி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றார். இதையறிந்த வருவாய்த் துறையினர் மரங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையறிந்த அரியலுார் மாவட்டம், திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏ.நெப்போலியன் (45) தான் ஆய்வாளர் என்றும், மாவட்ட ஆட்சியர் தனது உறவினர் எனவும், வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகவும், அதற்கு ரூ.1 கோடி தருமாறு கூறி ரவிச்சந்திரனிடம் இருந்து பெற்றுள்ளார். மேலும், அடிக்கடி ரவிசந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார்.
இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நெப்போலியனை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.