வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. நட்டா

வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல...
ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டாX | Jagat Prakash Nadda
Published on
Updated on
2 min read

புது தில்லி: வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் அதன் மூலம் அவற்றின் சொத்துகளும் நிதியும் முஸ்லிம் சமூகத்திற்கான கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

பாஜக 46-ஆவது ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜெ.பி. நட்டா,

துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் உள்ள வக்ஃப் சொத்துகளை அரசே தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இங்கு வக்ஃப் சொத்துகளை யாா் கையாளுகிறாா்கள் என்பதை மட்டுமே அரசு கேட்கிறது. அதனை நிா்வகிப்பவா்கள் சட்டத்துக்குள்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்கிறது.

வக்ஃப் வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியவர், வக்ஃப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல. வக்ஃப் சொத்துகளும் நிதியும் முஸ்லிம்களின் கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி வக்ஃப் வாரியம் செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று நட்டா கூறினார்.

1951 ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்துடன் தொடங்கிய பாஜகவின் அரசியல் பயணத்தை குறிப்பிட்டு பேசிய நட்டா, உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக திகழ்கிறது. பாஜக தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் விலகாமல் பயணிப்பதால் இன்று நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது என்றும் நாட்டின் செல்வாக்குமிக்க கட்சியாக இருந்த காங்கிரஸ் தனது கொள்கைகளில் இருந்து விலகிபோனதால் இப்போது மக்களின் நம்பிக்கையை இழந்து சரிவைச் சந்தித்துள்ளது.

பாஜகவின் வெற்றிக்கு சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாய், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி போன்ற கட்சியின் முக்கிய தலைவர்களே காரணம் என்றும் அவர் கூறினார்.

இன்று, பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 98 உறுப்பினா்களும் உள்ளனா். நாடு முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உள்ளனா். பாஜகவில் அண்மையில் உறுப்பினா்கள் சோ்க்கையை நடத்தி முடித்துள்ளோம். இப்போது பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 13.5 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் 10 லட்சம் போ் தீவிரமாக களப்பணியாற்றி உள்ளனர். கட்சியை வளா்ப்பதிலும், அரசியலை முன்னெடுப்பதிலும் "அறிவியல்பூா்வமான அணுகுமுறையை" கண்ட ஒரே அரசியல் கட்சி பாஜக மட்டுமே என்றும், கட்சியை வலிமைப்படுத்துவம் தேர்தல்களில் வெற்றி பெறுவதும் ஒரு கலை அறிவியல் என்று அவர் கூறினார்.

நமது எதிரிகள் நாடாளுமன்றத்தில் நம்மை ஏளனம் செய்தாலும், உலகின் மிகப்பெரிய கட்சி நாம்தான் என்றும் கூறுகிறார்கள். நமது எதிரிகள் கூட நமது பலத்தை அங்கீகரிக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜகவின் கொள்கை. நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் வரலாற்று தொன்மையை தொடர்ந்து முன்னிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவததாகவும், பாஜக ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஷா பானோ வழக்கில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவுகளின் அழுத்தத்திற்கு "தலைவணங்கி" திருப்திப்படுத்தும் அரசியலுக்கு அடிபணிந்ததாக அவர் கூறினார்.

முஸ்லீம் பெண்களின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்த போதிலும், தீர்க்கமான நடவடிக்கை எடுக்க யாருக்கும் தைரியம் இல்லை" என்று கூறியவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களை விடுவித்தது. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் "மத துன்புறுத்தலில்" பாதிக்கப்பட்டு இந்தியா வந்தவா்களுக்கு குடியுரிமை உரிமைகளையும் வழங்கியது. ஆங்கிலேய ஆட்சியில் திணிக்கப்பட்ட அடிமை மனப்பான்மையில் இருந்து இந்தியாவை மீட்டு வருகிறோம் என்றாா்.

நாங்கள் காலனித்துவ மனநிலையிலிருந்து வெளியே வருவோம் என்று சொன்னோம். இப்போது இந்தியா கேட் அருகே சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது,

370 ஆவது பிரிவையும் ரத்து செய்துள்ளோம். கொள்கைகளில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர். அம்பேத்கர் வகுத்த "கொள்கைகளின் அடிப்படையில்" பாஜக முன்னேறி வருவதாகவும், அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் "ஆன்மாவை" தாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 14-25 வரை அம்பேத்கர் ஜெயந்தியின் போது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் மக்களைச் சந்தித்து, அரசியலமைப்பின் "அடிப்படை உணர்வை" காங்கிரஸ் எவ்வாறு தாக்க முயன்றது என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்று நட்டா கேட்டுக் கொண்டார்.

1997 ஆம் ஆண்டு தில்லி மேயராக இருந்த மூத்த பாஜக நிர்வாகியான 98 வயது சகுந்தலா ஆர்யாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.

முன்னதாக, கட்சி தலைமையகத்தில் பாஜக கொடியை நட்டா ஏற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்பட கட்சித் தலைவர்கள், தொண்டா்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com