தண்ணீர் பஞ்சத்தால் பிரிந்து சென்ற மனைவி! கணவனின் புகாரால் நிர்வாகம் நடவடிக்கை!

மத்தியப் பிரதேசத்தில் தண்ணீர் பிரச்னையால் குடும்பத்தினர் பிரிந்ததைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினால் மனைவி பிரிந்து செல்லவே அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டோரியின் தேவ்ரா கிராமத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரா சோனி என்ற நபர் வாரம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தங்களது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தின் பாதிப்புகள் குறித்து புகாரளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், தங்களது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினால் தனது மனைவி லக்‌ஷ்மி தன்னைவிட்டு பிரிந்து சென்று அவரது பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்ட போதிலும் தண்ணீர் இல்லாத கிராமத்தில் எந்தவொரு எதிர்காலமும் இல்லை எனக் கூறி லக்‌ஷ்மி மீண்டும் அவருடன் வர மறுத்ததாக ஜித்தேந்திரா சோனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பழங்குடியின மக்கள் அதிகமுள்ள திண்டோரி மாவட்டத்தின், சுமார் 2000 - 2500 பேர் வசிக்கும் தேவ்ரா கிராமத்தில் ஒரேயொரு குழாய் மட்டுமே உள்ளதெனவும் தண்ணீர் பிரச்னையால் பலரும் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்தக் கூட்டத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேவ்ரா கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் பணிகளை மேற்கொள்ளுமாறு திண்டோரி மாவட்ட ஆட்சியர் பொது சுகாதார பொறியியல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அங்கு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் குழாய் அமைப்புகளை ஜல் ஜீவன் திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அருகிலுள்ள தண்ணீர் டேங்குடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேவ்ரா உள்பட சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com