'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி! - உதயநிதி ஸ்டாலின்

'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் தகவல்.
'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி! - உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் இந்தாண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியாகின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 50 பேர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

" நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நேரத்தில், சில கருத்துகளை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மத்திய அரசுப் பணிகளைப் பொருத்தவரை, 2016 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். ஆனால், 2016-க்கு பிறகு அந்த எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. குறிப்பாக, 2021 இல், மட்டும் 27 தமிழர்கள் மட்டுமே மத்திய அரசினுடைய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமென்ற அந்த ஒரே நோக்கத்தோடு முதல்வர் தலைமையிலான அரசு, நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியது.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தப் பிரிவுக்காக முதல்வர் ரூ.10 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வின்மூலம் 10 மாதங்களுக்கு தலா ரூ. 7,500, முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தலா ரூ.25,000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 2023-2024 ஆம் ஆண்டிலேயே, 47 தமிழ்நாட்டு மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்கள். இது முந்தைய ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமானதாகும்.

அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் 18 பேர் 'நான் முதல்வன்' உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் என்பதை இங்கே நான் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த சிவச்சந்திரன் யுபிஎஸ்சி தேர்வில், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும் பெற்றிருக்கிறார். அதேபோல், மோனிகா அகில இந்திய அளவில் 39 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கின்றார்.

யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்காக புதுதில்லி செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவிற்காக தலா ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்ற அந்த வரலாற்றை மீண்டும் நிலைநாட்டுகிற வகையில், நான் முதல்வன் திட்டம் இதே உறுதியோடு செயல்படும்.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை பேருக்கும் இந்த பேரவையின் வாயிலாக நம்முடைய அன்பையும், வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்வோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் என மக்களுக்கான சேவையில் ஈடுபடவுள்ள நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களுடைய பணி சிறக்கட்டும் என்று இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com