திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52) குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்
Published on
Updated on
2 min read

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52) குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கில் தொழுவு கிராமத்தில் மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சண்முகவேல், மோதலை தடுத்து காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், அரிவாளால் சண்முகவேலை வெட்டியுள்ளார். உடனிருந்த ஓட்டுநரையும் வெட்டுவதற்காக தங்கபாண்டியன் துரத்திய நிலையில், அவர் தப்பித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், குடிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் சண்முகவேல் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தங்கபாண்டியனை தேடுவதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி நிதியுதவி

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சண்முகவேல்(52) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியார் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்னை குறித்து தகவல் அறிந்து விசாரணை நடத்த சம்பவ இடத்துக்குச் சென்றபோது பிரச்னையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு ஆய்வாளர் மற்றும் ஆயுதசப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பலியானார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Summary

SI hacked to death near Tiruppur: Rs. 1 crore financial assistance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com