
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,"2026 சட்டப்பேரவை தேர்தல் வரை, ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரசாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும்" என்று கூறியிருக்கிறார்.
அதே கூட்டத்தில் "கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்றது போல, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையான வெற்றியைப் பெரும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அப்படியொரு நம்பிக்கை முதல்வரது மனதில் உண்மையிலேயே இருந்தால், ஆளுநர் ஆர்.என். ரவி பற்றியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?
அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, திமுகவினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார். அவர் வெளியிட்ட ஆடியோவின் விளைவாகத்தான், நிதியமைச்சராக இருந்த உச்ச அதிகாரத்தில் இருந்த ஒருவரை, முதல்வர் ஸ்டாலினே வேறு துறைக்கு மாற்றியிருக்கிறார். அண்ணாமலையின் விளைவு என்ன என்பதை, திமுக அரசில் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டால் சொல்வார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.
அண்ணாமலை காய்ச்சல் முதலில் ஸ்டாலினை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார்.
திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதிக இடங்களை கொடுக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டோம் என்பதை கூட்டணி கட்சிகள் வெவ்வேறு விதங்களில் சொல்லி மிரட்டி வருகிறார்கள். நாங்கள் போனால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் வெளியே வந்துவிடும் என்று ஒவ்வொரு கட்சியும் திமுகவை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீரழிவு என்று திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவற்றை எல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருவது இயற்கை தான். அதைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆவடி பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
எப்போதும் அண்ணாமலை பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பற்றி அவரது கட்சியினர் தான் கவலைப்பட வேண்டும். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி என பிரசாத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.