கோபியில் நாளை லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் வரும் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.
சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர்.
சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர்.
Published on
Updated on
2 min read

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்த நாள் விழா கோபியில் சனிக்கிழமை (பிப்.22) நடைபெற உள்ளது.

கோபிச்செட்டிபாளையத்தில் 1917 பிப்ரவரி 22 இல் பெரும் நிலக்கிழாரான சீனிவாச ஐயரின் மகனாகப் பிறந்தவர் ஜி.எஸ். லட்சுமண ஐயர். தந்தை சீனிவாச ஐயர் விடுதலைப் போராட்ட வீரர். கோபியைச் சுற்றி 650-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமானவை. டி.எஸ். வங்கி எனும் வங்கியையே நடத்தி வந்தவர். பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தனது நிலங்களை இலவசமாக வழங்கியவர். தலித் மக்களின் குடியிருப்புக்காக ஆறரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியவர்.

சமூக அக்கறை மிக்க அவரது வாழ்க்கையைப் பின்பற்றிய லட்சுமண ஐயர்,தந்தையைப் போலவே பல்வேறு சமூகப் புரட்சிகளைச் செய்தவர். ஊர்க் கிணறுகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு சாதியவாதிகள் அனுமதி மறுத்த நிலையில், அவர்களைத் தங்கள் வீட்டுக் கிணற்றிலேயே நீர் எடுக்க அனுமதித்தவர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் கூடிய மாணவர் விடுதிகளை 1935 இல் தொடங்கி நடத்தி வந்தவர். மாணவர்களுக்காக டி.எஸ்.ராமன் விடுதியையும், மாணவிகளுக்காக சரோஜினி தேவி விடுதியையும் அவர் நடத்தி வந்தார்.

விடுதலைக்குப் பிறகு 1952 இல் கோபி நகரமன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற லட்சுமண ஐயர், பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார். அவற்றில் கோபிக்கு பவானி நதி நீரைக் கொண்டுவரும் திட்டம் ஒன்று. கோபி பகுதியில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் நீரெடுப்பதற்கு ஆதிக்க சாதியினர் விதித்திருந்த சமூகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்தே கோபி பகுதியில் வசித்த தலித் மக்கள் பொதுக் கிணறுகளில் நீரெடுக்கும் உரிமையைப் பெற்றனர். தக்கர் பாபா வித்யாலயம் என்ற தொடக்கப் பள்ளி, பால்வாடிகள், குழந்தைகள் காப்பு மையங்கள் என்று லட்சுமண ஐயர் நிறுவிய கல்வி மையங்கள் ஏராளமான குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறக்கச்செய்தன. அவர் நடத்திய பள்ளி, விடுதியில் தங்கிப் படித்த குழந்தைகள் இன்றைக்கு நல்ல பணியில் சமூக மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

காந்தியடிகளின் சத்தியாகிரக வழியை தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கடைபிடித்து வாழ்து, அரசியல் என்பது சமூகப் பணிகளுக்கானது என்று நம்பிய தலைமுறையினரின் கடைசி மனிதரான லட்சுமண ஐயர் 2011 இல் மறைந்தார். இறக்கும்போது அவருடைய பெயரில் ஒரு சென்ட் நிலமில்லை. அவர் இறந்தபோது ஊரிலேயே புதிய தலைமுறையினர் பலருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், தியாக வாழ்க்கைக்கு மறைவு ஏது? அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் வரும் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.

மாணவர்களுக்காக லட்சுமண ஐயர் தொடங்கிய டி.எஸ்.ராமன் விடுதி, சரோஜினி தேவி விடுதியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா, லட்சுமண ஐயர் குடும்ப உறுப்பினர்களை கௌரவித்தல், விடுதியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் படத் திறப்பு, விடுதியின் முன்னாள் காப்பாளர்களை கௌரவித்தல், விடுதியின் வளர்சிக்கு உதவிய சிறந்த பங்களிப்பாளர்களை கௌரவித்தல் ஆகிய ஐம்பெரும் விழாக்கள் கோபி, வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதி, சரோஜினி தேவி விடுதி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியர் கா.பழனிதுரை, அக்னி ஸ்டீல் தங்கவேல், கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி. தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com