சிந்துவெளி குறித்து தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி நல்கை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கு எழும்பூா் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!
‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
சிந்துவெளி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் தலை சிறந்த தொல்லியியல் அறிஞர் தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி நல்கை வழங்கப்படும்.
கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் 2 தொல்லியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சிந்துவெளி எழுத்துமுறையைப் புரியும் வகையில் எழுதுவோருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்
சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். நமக்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். தமிழ் பண்பாட்டை பேணிக் காப்பது தமிழக அரசின் கடமை. சிந்துவெளி மண்பாண்ட குறியீடுகள், தமிழ் மண்பாண்ட குறியீடுகளுடன் 60% ஒத்துபோயுள்ளன.
சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழகத்தின் பெருமை நிறைந்துள்ளது என்று தெரிவித்தார்.