தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்! பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

News image

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்.

படம்: தினமணி

Updated On :12 ஜனவரி 2025, 5:47 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று (ஜன.12) ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து வா, வா நடராஜா, வந்து விடு நடராஜா என முழக்கமிட்டு தேர்களை இழுத்தனர்.

நாளை (ஜன.13) திங்கள்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்: நடராஜர் கோயிலில் கடந்த ஜன.4-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதியில் தேர்நிலையை அடைகின்றன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை: தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர். மேலும் தேரோடும் வீதிகளில் இளைஞர்களின் சிலம்பாட்டம், மாணவியர்களின் கோலாட்டம், சிவபக்தர்கள் சிவன் - பார்வதி வேடமணிந்து நடணம், மேள கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்திய வன்னம் சென்றனர்.

Story image

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதி தேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின்போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று மாலை 3 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் செல்கின்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்: நாளை(ஜன. 13) திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெறுகிறது.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.

ஜன.14-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.15-ம்தேதி புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்பகுளத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் து. ந. சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ச.க. சிவராஜதீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி. அஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ரமேஷ்பாபு, கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் டி.மல்லிகா, பொறியாளர் சுரேஷ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.