வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி
Published on
Updated on
2 min read

சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமாா் 5,700 ஏக்கா் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு செய்து அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பரந்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் 907 ஆவது நாளாக போராட்டக் குழுவினராக, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

விமான நிலைய எதிர்ப்புக் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் தலைமையில் நாள்தோறும் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள திடலில் கிராம மக்கள் ஒன்று கூடி அமா்ந்து தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வசித்து வந்தவா்களை மாற்றிடத்தில் மீள்குடியேற்ற தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் (டிட்கோ) இடங்களை முன்னதாக தோ்ந்தெடுத்து அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேலாண்மைத் திட்டம் தயார் செய்து, ஆய்வு செய்வதற்கான எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் பரந்தூர் மக்களை நேரில் சந்திக்க, தவெக தலைவர் விஜய் ஜன.19, 20 செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நான்கு பேர் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது ஏகனாபுரம் கிராமத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவாக மக்களை சந்திக்கும் இடத்தில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் அந்தப் பகுதியினை தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் நடத்தினார்.

காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி கிடைக்காத நிலையில் அதற்கு மாற்றாக அருகில் இருந்த தனியார் பண்ணை பகுதியில் திருமண மண்டபத்தையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பகுதி மிகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தாலும் அங்கு திருமண தேதிகள் உள்ளதால், அதில் அவர்களை சந்திக்க குறிப்பிட்ட தேதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மண்டபத்தை ஆய்வு செய்தபோது லயன்ஸ் கிளப் கூட்டம் நடத்த ஆய்வு செய்ய வந்ததாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் காவல்துறை மற்றும் திருமண மண்டப உரிமையாளர் அனைவரும் விஜய் கட்சிக்கான கூட்டம் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாக தெரியவந்த நிலையில், தற்போது காலியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக திருமண மண்டபங்களை கட்சி நிகழ்ச்சிகளுக்கு தருவதில்லை என்பதும், இதனால் விஜய் அந்த பகுதி மக்களை சந்திப்பதில் மிகுந்த சிக்கல் எழுந்து வந்தது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ஜன. 20 ஆம் தேதி பரந்தூர் சென்று போராட்டக்காரர்களைச் சந்திக்கிறார் விஜய்.

அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com