தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Published on
Updated on
3 min read

சென்னை: தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழகினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றன். அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக ‘திறன்’ மற்றும் டிஎன் ஸ்பார்க் ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக இந்த 3 நாட்களில் மட்டும் நடைபெறுகின்ற 2 நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டுள்ளேன். நேற்று முன்தினம் இதே அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு நிகழ்ச்சி, ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால் 2 நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடந்தது. இன்றைக்கு ஆசிரியர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சர்.உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.

திராவிட இயக்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு

பொதுவாகவே திராவிட இயக்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மீது, பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தார்கள். இன்றைக்கு குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், மகிழ்ச்சியான விசயம் இன்றைக்கு நிறைய மகளிர் ஆசிரியர்களாக இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள்.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலின்

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெண்களை அதிகளவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் பெரியார். பெரியாரின் விருப்பத்துக்கு ஏற்ப, தொடக்கப்பள்ளிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வாய்ப்பை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நம்முடைய முதல்வர் ஆசிரியர்கள் மீது அன்போடு இருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு ‘அகரம்’ சொல்லிக் கொடுத்து, அவர்கள் படிக்கப் போகின்ற தானியங்கியல்(ரோபாட்டிக்ஸ்), செய்யறிவு(ஏஐ) போன்ற பெரிய, பெரிய படிப்புக்கெல்லாம் அடித்தளம் இடுவது தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள் தான்.

உங்களிடமிருந்து தான் கல்வியை மட்டுமின்றி இன்றைக்கு உலகையும் மாணவச் செல்வங்கள் கற்றுக் கொள்ள இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஆரம்பக் கல்வியை வழங்கும் பணியை தொடங்கவுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள், பாராட்டுக்கு உரியவர்கள். திராவிட மாடல் அரசு அமைந்த நாள் முதல், நம்முடைய முதல்வர் தீட்டுகின்ற ஒவ்வொரு திட்டமும், வரலாற்றுச் சாதனையாக உயர்ந்து நிற்கின்றது.

100 சதவீதம் பணியிடங்களை நிரப்பியுள்ளோம்

அந்த வகையில், இன்றைய தினம் இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியும் வரலாற்றில் நிச்சயம் இடம்பெறப் போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. நீங்கள் இன்றைக்கு பணி ஆணையை பெறுவதால் மட்டும் நான் இதை சொல்லவில்லை. பள்ளிகல்வித்துறை வரலாற்றிலே முதன்முறையாக மலைப்பகுதிகளில் காலிப்பணியிடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, 100க்கு 100 சதவீதம், இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்து இருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு. இதன் மூலம் திராவிட மாடல் அரசு என்றால் சமூக நீதிக்கான அரசு என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம்

முதல்வர் பலமுறை பெருமையாக கூறி இருக்கிறார்கள், தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் எதுவென்று கேட்டீர்கள் என்றால், அது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியினுடைய பணிக்காலம் தான் என்று பாராட்டியிருக்கிறார்கள். அதனை இன்றைக்கு மீண்டும் பொன் எழுத்துக்களால் பொறித்து நிரூபித்து காட்டியிருக்கிறார் அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு

தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள் நீங்கள் தான். இதனை நான் சும்மா சொல்லவில்லை. மத்திய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி. இதை உணர்ந்த காரணத்தினால் தான் நம்முடைய கலைஞர் உங்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை தந்தார்கள்.

வாழ்க்கையை மாற்றிய கருணாநிதி கையெழுத்து

கருணாநிதி பேனா தான் மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையான ஒரு ஊதியத்தை, மாநில அரசின் ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றுக்கொடுத்தது.

ஒரே கையெழுத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியவர் யார் என்று நான் சொல்ல தேவையில்லை உங்களுக்கே தெரியும். ஆனால், ஒரே கையெழுத்தின் மூலம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்த ஒரே தலைவர் முத்தமிழறிஞர் கருணாநிதி.

ஆகவே, கலைஞர் அவர்கள் வழியிலே செயல்பட்டு வருகின்ற நம்முடைய முதல்வர், அரசு பணியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என்னென்ன வேண்டும் என்பதை உரிய நேரத்தில் உங்களுடைய தேவையை அறிந்து அந்த திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தின் மீதான முதலீடு

அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்றைக்கு இவ்வளவுத் திட்டங்களை வழங்குகிறோம் என்றால், இதை எல்லாம் முதல்வர் செலவாக பார்க்கவில்லை. அவற்றை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீதான முதலீடாகத்தான் பார்க்கின்றார்கள். அதனால் தான், மத்திய அரசு கல்விக்கான நிதியை வழங்காமல் நிதிச்சுமையை ஏற்படுத்துகின்ற போதிலும், முதல்வர், ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதையெல்லாம் நீங்கள் உணர்ந்து உங்களுடைய பணிகளை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

குறிப்பாக, விளையாட்டுத் துறை அமைச்சராக உங்களுக்கு ஒரு வேண்டுகோள், பிள்ளைகளை படிக்கச் சொல்லும் அதே வேளையில் விளையாடவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்று துணை முதல்வர் கூறினார்.

Summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin said that Tamil Nadu is the only state without 100 percent dropout rate in primary education.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com