பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வாழும் பகுதியில் குண்டு வீசியதைப் பற்றி..
போர் விமானங்கள் தவறுதலாக குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போர் விமானங்கள் தவறுதலாக குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.AP
Published on
Updated on
2 min read

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அருகில் இன்று (மார்ச் 6) காலை 10 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) தென் கொரிய விமானப் படைக்கு சொந்தமான கே எஃப் - 16 ரக இரண்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

அப்போது, ஆயுதங்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சியில் அந்த விமானங்களிலிருந்து 8 எம்கே - 82 ரக வெடி குண்டுகள் அங்குள்ள ஓர் கிராமத்தின் மீது தவறுதலாக வீசப்பட்டுள்ளன.

இதில், அப்பகுதியிலுள்ள தேவாலயத்தின் கட்டடம், வீடுகள் ஆகியவை சேதமானதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!

போர் விமானங்கள் வீசிய குண்டுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டடங்கள் சேதமாகின.
போர் விமானங்கள் வீசிய குண்டுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டடங்கள் சேதமாகின.AP

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அந்நாட்டு விமானப் படை மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரண மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த இரண்டு போர் விமானங்களின் விமானிகளில் ஒருவர் தவறான ஆயத்தொலைவுகளை (கோஆர்டினேட்ஸ்) உள்ளிட்டதால், மக்கள் குடியிருப்பின் மீது குண்டுகள் விழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாவது போர் விமானம் ஏன் குண்டுகளை வீசியது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவராததினால் அதனைக் கண்டைறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னர் ராணுவத்தின் அனைத்து நேரடி பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் ஏதேனும் வெடிக்காமல் உள்ளதா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அவ்வாறு எந்தவொரு குண்டும் கிடைக்கவில்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த பயிற்சியானது அமெரிக்க ராணுவத்துடனான கூட்டுப் பயிற்சியின் ஓர் பகுதி என தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 10 முதல் மார்ச் 20 வரையிலான காலத்தில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு தென் கொரியா அமெரிக்கா கூட்டுப் பயிற்சியின்போது சுடப்பட்ட சிறிய ரக ஏவுகணை ஒன்று தொழில்நுட்பக் கோளாரினால் ராணுவத் தளத்தினுள் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com