
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மங்கோலியா நாட்டு அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மகளிர் தினம் நாளை (மார்ச் 8) கொண்டாடப்படவுள்ள நிலையில் மங்கோலியா நாட்டு அதிபர் உக்னா குரேல்சுக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாய்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை வளர்த்து அவர்களை கல்வி அறிவு மற்றும் தேசபக்தியுள்ள மங்கோலிய குடிமக்களாக உருவாகுவதற்கு தங்களது இதயத்தையும் அன்பையும் முழுமையாக அர்ப்பணிப்பதாகவும் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து தாய்களுக்கும் பெண்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் வீடுகள் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டு அவர்களின் குழந்தைகளின் மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வலியுறுத்தல்!
முன்னதாக, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவின் 35 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 18 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள். அதில் 70.2 சதவிகிதம் பேர் நகரத்திலும் 29.8 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களிலும் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மங்கோலியா நாட்டு பெண்களின் சராசரி ஆயுள் காலம் 76 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் மங்கோலியாவில் 4 அல்லது அதற்கும் மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதுடன் அவர்களின் கல்வி, சுகாதாரம் போன்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தாய்மார்களை சிறப்பிக்கும் விதமாக அரசு சார்பில் ’ஆர்டர் ஆஃப் மெடர்னல் க்ளோரி’ எனும் விருது வழங்கப்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 11,294 தாய்மார்கள் இந்த விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.