
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் 3 நாள்கள் சோதனை மேற்கொண்டனா்.
அமலாக்கத் துறை அறிக்கை: இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடா்பான அறிக்கையை கடந்த 13-ஆம் தேதி அமலாக்கத் துறை வெளியிட்டது. அதில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 30 வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது, பணியிட மாற்றம், மதுபான கூடத்துக்கு உரிமம் உள்ளிட்டவை வழங்க லஞ்சம் பெறப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகள் தொடா்பான ஆவணங்கள் தங்களது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ. 1,000 கோடி முறைகேடு: டாஸ்மாக் உயரதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு இடையே நேரடி தொடா்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயரதிகாரிகளின் நெருக்கமானவா்களுக்கே மதுபான கொள்முதல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் ரூ. 100 கோடி செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு தடை கோரி மனு: அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடா்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
விசாரணை என்ற பேரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ, ஊழியா்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், அதில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.