'தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு!'

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
Vande Bharat train
கோப்புப்படம்ENS
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள்  
பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு இயக்குவதற்காக 20 ரயில்களுக்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அவை பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அவற்றில் 9 ரயில்களுக்கான பெட்டிகள் வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு தொடர்வண்டித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்பட்ட 20 வந்தே பாரத் தொடர்வண்டிகளுக்கான பெட்டிகளில்  9 தொடர்வண்டிகளுக்கான பெட்டிகள்  ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக  தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில்  வந்தே பாரத் தொடர்வண்டிகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய தொடர்வண்டிப் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது.

2022-ஆம் ஆண்டில் வந்தே பாரத் தொடர்வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு  தமிழ்நாட்டில்  20 வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்டன. 20 பெட்டிகளைக் கொண்ட 4  தொடர்வண்டிகள், 16 பெட்டிகளைக் கொண்ட 4  தொடர்வண்டிகள், 8 பெட்டிகளைக் கொண்ட 12  தொடர்வண்டிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன. அவற்றில் 10 தொடர்வண்டிகள் மட்டும்தான் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. மேலும் ஒரு வந்தே பாரத்  தொடர்வண்டி   மாற்றுச் சேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 தொடர்வண்டிகளை இயக்குவதற்கான பெட்டிகள் கிழக்கு கடற்கரை ரயில்வே (ஒடிசா), தென்கிழக்கு ரயில்வே (கொல்கத்தா), தென்கிழக்கு மத்திய ரயில்வே (சத்தீஸ்கர்) ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்தப் பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் தொடர்வண்டிகள் தமிழகத்தில் இயக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 8,700 பேர் கூடுதலாக பயணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பை தமிழ்நாடு இழந்து விட்டது.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய வந்தே பாரத் தொடர்வண்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு தெற்கு தொடர்வண்டித்துறையின் அலட்சியம்தான் காரணம் ஆகும். தமிழ்நாட்டிற்கு 20 வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்கத் தேவையான பெட்டிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்தி எந்தெந்த வழித்தடத்தில் வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்கலாம் என்ற திட்டத்தை தெற்கு தொடர்வண்டித் துறை வகுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் 9 தொடர்வண்டிகளை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகளை தெற்கு தொடர்வண்டித்துறை பயன்படுத்தாமல் வைத்திருந்ததால்தான் அவை வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என தொடர்வண்டித்துறை அதிகாரிகளே கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து பெங்களூர், தூத்துக்குடி, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல வழித்தடங்களில்  வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓராண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு வசதியாக பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வந்தே பாரத் தொடர்வண்டிப் பெட்டிகளையோ அல்லது அவற்றுக்கு மாற்றாக புதிய தொடர்வண்டிப் பெட்டிகளையோ கேட்டுப் பெற்று  தமிழகத்தில் தேவையான வழித்தடங்களில்  புதிய வந்தே பாரத் தொடர்வண்டிகளை இயக்க தெற்கு தொடர்வண்டித்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com