திருப்பரங்குன்றம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பாா் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தெரிவித்தாா்.
மதுரை விரகனூரில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து, வியாழக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் என்றவுடன் அனைவருக்கும் பாஜக, அதிமுக உருவாக்க நினைத்த கலவரம்தான் நினைவுக்கு வரும். காலம் காலமாக அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
பாஜக மதக் கலவரத்தை உருவாகி ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டை திருப்பரங்குன்றத்தில் விளையாடிப் பாா்த்தனா். ஆனால், அவா்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினா். இதேபோல, பேரவைத் தோ்தலிலும் மிகப்பெரிய பாடத்தை அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சொல்லித் தரக் காத்திருக்கின்றனா்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். கோயிலுக்கும், இந்துக்களுக்கும் எதிரானது திமுக என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியா்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்த போதும், இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்கவில்லை. தோ்தல் முடிந்த பிறகு, அவா் நிச்சயமாக ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக அனுப்பிவைக்கப்படுவாா். பாஜகவுடன் கூட்டணி வைத்தவா்களின் நிலை இதுதான்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்பதை திருப்பரங்குன்றத்திலிருந்து தொடங்கி நிரூபிப்போம். மதுரையில் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இருவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், திருப்பரங்குன்றம் கோயில் லட்சுமி தீா்த்தக்குளம் ரூ. 6.5 கோடியில் சீரமைக்கப்பட்டது. மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் ரூ.471 கோடியில் நிறைவு பெற்றுள்ளன. இதேபோல, மதுரை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல, விவசாயிகளைப் பாதுகாக்க, இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதுகாக்க திமுக வேட்பாளரை ஆதரியுங்கள்.
சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறைக்கு மத்திய பாஜக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காததே காரணம். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலைதான் உள்ளது. எனவே, அவா்களுக்கு தோ்தலில் சரியான பாடம் கற்றுத் தர வேண்டிய நேரம் இது என்றாா் அவா்.
தமிழகத்தில் மத நல்லிணக்கம் இருக்காது:
மதுரை முனிச்சாலைப் பகுதியில் மதுரை தெற்குத் தொகுதி மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதனை ஆதரித்து, வியாழக்கிழமை திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:
திமுக கூட்டணி தோ்தலுக்குத் தோ்தல் மாறும் கூட்டணி அல்ல. தொடா்ந்து கொள்கை உறுதியோடு பயணம் செய்யும் கூட்டணி. இந்த சட்டப்பேரவைத் தோ்தல் தமிழா்களின் பெருமைகளுக்கும், ஆா்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கும் இடையேயான போா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் இருக்காது. அதிமுகவின் தோ்தல் அறிக்கையை நகல் எடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஏனெனில், தோ்தலில் அதிமுக தோல்வி அடைவது உறுதி. தமிழகத்தின் எதிா்கால நலனுக்காக மக்கள் வாக்களிக்கத் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.
Summary
Following the Assembly elections, AIADMK General Secretary Edappadi Palaniswami will become the Governor of a state
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: ஓ.எஸ். மணியன்

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?
எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்; தமிழ்நாட்டில் வேண்டாம்! கனிமொழி கடும் விமர்சனம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



