

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டில் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை. இது 2024-ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிப்பு எனவும், லட்டுகளில் மேம்படுத்தப்பட்ட சுவை மற்றும் தரத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 27 ஆம் தேதி மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையாகி சாதனை.
இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025-ஆம் ஆண்டில், ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் விற்பனையில் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில் பக்தர்களுக்கு 12.15 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டில் சுமார் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டை விட பக்தர்களுக்கு கூடுதலாக 1.37 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகரிப்பு.
2025-ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மட்டும் பக்தர்கள் அதிகபட்சமாக 5.13 லட்சம் லட்டுகளை வாங்கியுள்ளனர்.
பக்தர்கள் வருகையும் 2.55 கோடியில் இருந்து 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.
திருமலை தேவஸ்தானம் நாள்தோறும் சுமார் 4 லட்சம் லட்டுகளைத் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறது. முக்கிய திருவிழா நாட்களில் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் தயாரித்து இருப்பு வைக்கப்படுகின்றன. பிற நாள்களில் கூடுதலாக 3.50 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்படுகின்றன.
ஸ்ரீவாரி மடப்பள்ளியில், சுமார் 700 ஸ்ரீ வைணவ பிராமணர்கள் இரண்டு ஷிஃப்டுகளில், இரவு பகலாக, மத ஒழுக்கம் மற்றும் பாரம்பரியத்தை பின்பற்றி லட்டு பிரசாதத்தைத் தயாரித்து வருகின்றனர்.
சமீப காலங்களாக லட்டு பிரசாதத்தில் மேம்படுத்தப்பட்ட சுவை மற்றும் தரம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த பத்தாண்டுகளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 இல் பக்தர்களுக்கான லட்டு பிரசாத விற்பனையில் ஒரு மைல்கல் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.