

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முன்னோடி, உலக அளவில் முதலீட்டாளர்களின் காட்ஃபாதராக விளங்கும் தொழிலதிபர் வாரன் பஃபெட், புத்தாண்டான நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
95 வயதான வாரன் பஃபெட் கடந்த கடந்த 60 ஆண்டுகளாக பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ஒமஹாவின் சிகரம், பக்கத்துவீட்டு பணக்காரர் என்றெல்லாம் புகழப்படும் வாரன் பஃபெட், மிகப்பெரிய தோல்வியடைந்த ஜவுளி வணிக நிறுவனத்தை மிகப் பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற பெருமைக்குரியவர். தனது 60 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக 63 வயதான கிரெக் அபெல் தலைமை நிர்வாக அதிகாரியாக வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
நெப்ரஸ்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பெர்க்ஸ்ஷைர் ஹாத்தவே நிறுவனம், வாரனின் தலைமையின்கீழ் வால்ஸ்ட்ரீட், மெய்ன் ஸ்ட்ரீட் என அனைத்து பங்குச் சந்தைகளில் முதலீடுகளிலும் கொடி கட்டிப் பறந்தது. ரயில்வே, தொழில் நிறுவனங்களிலிருந்து ஐஸ்கிரீம் முதல் சாக்லேட் வரை அனைத்திலும் முதலீடு செய்து பல கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறது இந்த நிறுவனம்.
1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் சுமார் 30,000 டாலர்களுக்கு வாங்கிய வீட்டிலேயே இன்றுவரை அவர் குடியிருந்து வருகிறார். அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பலருக்கும் அவர் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான பல வழிமுறைகளைக் கற்றுக்கொடுத்துள்ளார்.
மூளையை மட்டுமே முதலீடாகக் கொண்டுதான் சம்பாரித்த பல கோடி ரூபாய் பணத்தை ஏழை, எளியோருக்கு தானமாகவும் வழங்கியிருக்கிறார்.
1942 ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளில் நுழைந்த வாரன் பஃபெட், தனக்கு 12 வயதுகூட நிரம்பாத நிலையில், சிட்டி சர்வீஸ் எரிவாயு நிறுவனத்தில் சுமார் 114.75 டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தார். இந்தப் பணத்தை தனக்கு 6 வயதிலிருந்தே சேமித்து வந்ததாகவும் தனது, “I had become a capitalist, and it felt good” (ஐ ஹேட் பிகேம் எ கேபிட்டலிஸ்ட், அண்ட் இட் பெல்ட் குட்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு 16 வயது இருக்கும்போது அவரின் பங்குகள் சுமார் 53,000 டாலர் அளவுக்கு உயர்ந்திருந்தன. தனது 32 வது வயதில் மில்லியனாரான அவர், 56 வது வயதில் பில்லியனர் என்ற உச்சநிலையையும் எட்டினார். ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலகளாவிய பில்லியனர்களின் பட்டியலில் 150 பில்லியன் டாலர்களுடன் 10 இடத்தில் இருக்கிறார் வாரன் பஃபெட்.
1964 ஆம் ஆண்டில் பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் முதலீடு செய்த வாரனின் பங்குகள், சுமார் 55 லட்சம் (55,00,000%) சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. மூளையை மட்டுமே முதலீடாக வைத்து உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகளை குவித்த வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் கோடிகளுக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
சுமார் ஒரு லட்சம் கோடி சந்தை மதிப்பு மிக்க பெர்க்ஸ்ஷைர் நிறுவனம் அதிக மதிப்பு நிறுவனங்களின் பட்டியலில் உலகளவில் 11 வது இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் ரயில் தளவாடங்கள், சீ கேண்டிஸ், பெஞ்சமின் மூர், டியூராசெல் பேட்டரி, ஓரியண்டல் ட்ரேடிங், டெய்ரி குயின் ஆகியவை அடங்கும். ஆப்பிள், கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பெரிய பொது நிறுவனங்களிலும் சக்திவாய்ந்த முதலீட்டாளராக பெர்க்ஸ்ஷைர் நிறுவனம் இருக்கிறது.
வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக தொடர்வார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.