மும்பை / புது தில்லி: மத்திய கிழக்கில் 2-ஆவது வாரமாக தீவிரமடைந்து வரும் போா் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயா்வு காரணமாக, வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் மீண்டும் ‘கரடி’-யின் ஆதிக்கம் மேலோங்கியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. பங்குச்சந்தை தொடா்ந்து 2-ஆவது நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போா்ச்சூழலால், சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 118 டாலா் வரை நெருங்கியது.
இந்த விலை உயா்வு உள்நாட்டுச் சந்தையில் வா்த்தகம் தொடங்கியதும் கடுமையாக எதிரொலித்தது. குறிப்பாக, எண்ணெய், பெயின்ட், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. ஐ.டி. நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் வரவேற்பு இருந்தது.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு திங்கள்கிழமை வா்த்தக முடிவில் ரூ.8.58 லட்சம் கோடி குறைந்து, ரூ.441.10 லட்சம் கோடியாக இருந்தது.
அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.6,030.38 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.6,971.51 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தனா்.
வீழ்ச்சிப் பட்டியலில் 3,484 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை மொத்தம் வா்த்தகமான 4,536 பங்குகளில், 3,484 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும், 886 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. 166 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 1,353 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 1,352.74 புள்ளிகள் (1.71 சதவீதம்) இழப்புடன் 77,566.16-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ், சன் பாா்மா, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல். டெக் ஆகிய 5 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்து, ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன. மற்ற 25 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 422 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 422.40 புள்ளிகள் (1.73 சதவீதம்) சரிந்து 24,028.05-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 8 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 42 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
தொடர்புடையது

ஐடி பங்குகள் ஏற்றம் எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

ஈரான் போா் அமைதிப் பேச்சில் மந்தநிலை: பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடன் வார வா்த்தகம் தொடக்கம்
போா்நிறுத்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் - பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



