

சென்னை: அதிமுக சுதந்திரமாக செயல்படாமல் சர்வாதிகாரமாக செயல்படுகிறது என்று திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வெற்றிக்கான திட்டங்களை வகுக்க தொடங்கிவிட்டன. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவான ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அதில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் ஓபிஎஸ்-க்கு அடுத்த நிலையில் இருந்த வைத்திலிங்கம் தற்போது தன்னை திமுகவில இணைத்துக் கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்தியலிங்கம் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைத்துக் கொண்டார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பதவி ராஜிநாமா
முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்திலிங்கம், தனது ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை, ராஜிநாமா செய்து விட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் போற்றுகிறார்கள், புகழ்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
தாய் கட்சியில் இணைந்துள்ளேன்
அதிமுகவில் இருந்து நான் விலகினாலும் அண்ணா ஆரம்பித்த தாய் கட்சியான திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.
முடிவு எடுப்பதில் தாமதம்
விரைவில் தேர்தல் வரவுள்ளது. முடிவு விரைவில் எடுக்க வேண்டும். ஆனால், கால தாமதம் ஏற்பட்டது. இதனால் திமுகவில் இணைந்துள்ளேன். நான் எந்த தேவையையும் முன் வைக்கவில்லை. கேட்கவில்லை.
மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்ட கட்சி திமுக
திமுகவில் இருந்து வந்ததுதான் அதிமுக. திராவிட இயக்கம், அது தாய் கட்சி. திராவிடக் கட்சி சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்டது. அரசியலுக்காக, மக்களுக்காக சேவை செய்வதற்கு தொடங்கப்பட்ட கட்சி திமுக. அதனால் நான் திமுகவில் இணைந்துள்ளேன்.
தஞ்சையில் 26 ஆம் தேதி இணைப்பு விழா
அதிமுக சுதந்திரமாக செயல்படாமல் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. இன்னும் நிறைய பேர் திமுகவிற்கு வரவுள்ளனர். முதல்வர் தலைமையில் தஞ்சையில் 26 ஆம் தேதி இணைப்பு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுகவில் இணைவதற்கு என்னை தனிப்பட்ட முறையில் அழைத்தார்கள். ஆனால் நான் செல்வதற்கு தயாராக இல்லை. அனைவரும் ஒன்றாக இணைந்தால் தான் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அவர்களது நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை என மேலும் கூறினார்.
ஒரத்தநாடு தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி அமைச்சரவையில் தொழில், வனம், சுற்றுச்சூழல், வீட்டு வசதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பி வகித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்த இவர், அதிமுகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், சசிகலா தரப்பு நெருக்கமானவர் என பேசப்பட்டவர்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வம் உடன் தனியாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.