பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு!மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு! - ஐஐடி தில்லி மண்டலம் முதலிடம்!!பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்புதிருச்சியில் முதல்வா் விஜய்யின் நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகள்!16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
/

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி! - அன்புமணி

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது குறித்து...

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 11:28 am IST

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க இந்த இடங்கள் தான் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கும் நிலையில் அதையும் பறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது அநீதியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 670 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகளில் மட்டும் 415 இடங்கள் உள்ள நிலையில், அதில் 50%, அதாவது 215 இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சேரும் அரசு மருத்துவர்களிடம், அவர்கள் ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று பிணைப் பத்திரம் எழுதி வாங்கப்படும். பொதுவாக உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் அனைவரும் அதிக ஊதியம் கிடைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ வல்லுனர்கள் கிடைப்பதற்கு இந்த ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காரணம் என்றால் அதில் மிகையில்லை.

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 215 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக நீட் தேர்வின் மூலம் உரிய தகுதி மதிப்பெண்களைப் பெற்று விண்ணப்பித்த 170 பேரில், அதிக மதிப்பெண் பெற்ற 100 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 71 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் 68 பேர் கடந்த ஏப்ரல் 6&ஆம் தேதி தங்களுக்கான ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இடங்களை நிரப்பும் நோக்குடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவிருந்த நிலையில் தான், முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்படாத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைக் காரணம் காட்டி, மத்திய சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் அலுவலகம் வாயிலாக நடத்தப் பட்டு வந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தப்ப்பட்ட நிலையில், வேறு வழியில்லாமல் அதை பின்பற்றி தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் 29&ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை.

தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கம் 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப் பட்ட பின்னர் முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசே நடத்தியதால், இந்த இடஒதுக்கீடு தடைபட்டது. எனினும் 2022 ஆம் ஆண்டில் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு அதன் மருத்துவர்களுக்காக இடங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்ததால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக தமிழக அரசு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கும்படி உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்புவதற்கு மூன்று முதன்மைச் சுற்றுகளும், நான்காவதாக ஒரு கூடுதல் சுற்றும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் தமிழக அரசு மருத்துவர்களுக்கான இடங்களுக்கு மட்டும் ஒரே ஒரு கட்ட கலந்தாய்வை மட்டும் நடத்தி விர்ட்டு, இரன்டாம் கட்ட கலந்தாய்வைக் கூட நடத்தாமல் மீதமுள்ள இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத அநீதியாகும்.

அண்மைக்காலங்களாக முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் பெரும்பாலானவை முதல் கட்ட கலந்தாய்வில் நிரம்புவதில்லை. அதன்பின் தகுதி மதிப்பெண்களை மத்திய அரசு குறைத்த பிறகு தான் பெரும்பான்மையான இடங்கள் நிரம்புகின்றன. நடப்பாண்டிலும் மத்திய அரசின் சார்பில் கலந்தாய்வு நடத்தப்படும் இடங்களுக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படவுள்ளன. அவ்வாறு குறைக்கப்பட்டால், அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டால், அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் 151 இடங்களும் ஒரு மணி நேரத்தில் நிரம்பி விடும். அதற்காக வாய்ப்புகளை வழங்காமல் உச்சநீதிமன்றம் தடை போடுவது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழக மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டவை. அவை தமிழக மக்களின் சொத்துகள். இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படாமல், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு வழங்கப்பட்டால், தமிழக அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள தகுதியான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த நிலையை மாற்ற தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கூடுதக் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Summary

PMK president Anbumani on Monday criticised the Injustice to Tamil Nadu in Super-Specialty Medical Admissions...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.