முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் வெற்றி! அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!
/

தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்..?

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளது குறித்து...

News image

முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம் - கோப்புப்படம்

Updated On :22 மே 2026, 10:34 am IST

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ச.ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் தவெகவின் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன், ஆா்.நிா்மல் குமாா், ராஜ்மோகன், டி.கே.பிரபு, எஸ்.கீா்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனா். கடந்த சனிக்கிழமை அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்தநிலையில், அமைச்சரவை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 23 + 2 = 25 அமைச்சா்களுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 35 அமைச்சா்கள் வரையில் நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் உச்சவரம்பு உள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை பதவியேற்ற 25 அமைச்சா்களுடன் சோ்த்து இதுவரை தவெக சாா்பில் 31, காங்கிரஸ் சாா்பில் 2, விசிக 1, ஐயூஎம்எல் 1 என 35 போ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.

இதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பதை தவெக உறுதி செய்துள்ளது.

59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ் குமாா், பெ.விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றுள்ளனா்.

முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்?

முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜய், 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சில முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் தில்லி வரும் தகவலை அடுத்து, தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை , ஆலோசனை அரங்கம் உள்ளிட்ட பகுதிகளை புதுப்பிப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தில்லிக்கு செல்லவுள்ள விஜய்க்கு தமிழர் பாரம்பரிய முறையில் சிறப்பு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, தமிழ்நாட்டில் இருந்து அரசு அதிகாரிகள், தில்லி சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தில்லி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் குறித்து தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Summary

Reports indicate that Chief Minister C. Joseph Vijay is set to travel to Delhi tomorrow (May 23) for a three-day visit...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.