

ஒரு பக்கம் தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு,மறுபக்கம் பழைய டீசல் வாகனங்களை உபயோகப்படுத்த கூடாதென பசுமைத் தீர்ப்பாயம் தடை உத்தரவு,இப்படியே போனால் என்ன தான் செய்வார்கள் வாகன ஓட்டிகள்?
வந்தது அதற்கொரு விடிவு காலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யில் இருந்து புது வகையான வாகன எரிபொருள் ஒன்றை கொச்சியைச் சேர்ந்த அதுல்,ராகுல்,அஜின் என்ற மூன்று மாணவர்கள் தங்களது கல்லூரி ஆண்டு இறுதி செயல்திட்டத்துக்காக கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு முறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை வடிகட்டி மீண்டும் மீண்டும் சமைக்கப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்,அப்படிப்பட்ட சூழலில் பயன்படுத்திய எண்ணெயை வாகன எரிபொருளாக மாற்றுவது என்பது சிக்கனமான முயற்சி தானே!
சமையல் எண்ணெய்யில் இருந்து பயோடீசல் தயாரிக்கும் முறை:
சமையல் எண்ணெய்யை சமைக்கப் பயன்படுத்திய பிறகு வடிகட்டி எடுத்து 'டிரான்செஸ்டரிபிகேஷன்’ எனும் செயல்முறைக்கு உட்படுத்தி எண்ணெய்யில் உள்ள அதிகப் படியான தேவையற்ற கொழுப்புகள் நீக்கப்படுகின்றன.இதையே பயோடீசல் என்கிறார்கள்.
சேர்க்கப்பட வேண்டிய ரசாயனப் பொருட்கள்:
சோடியம் ஹைடிராக்ஸைட் மற்றும் மெத்தனால் கலவை சமையல் எண்ணெய்யுடன் கலந்ததும் சன்னமான வெடிப்பொலியுடன் எண்ணெய்யில் உள்ள கொழுப்புகள் நீக்கப்படுகின்றன.இந்த முறையில் பயோடீசல் தயாரிப்பது எளிமையானது ஆனால் கண்டுபிடிப்பின் தொடக்க காலத்தில் அதன் தேவை குறைவு என்பதால் எரிபொருளுக்கான தயாரிப்பு செலவு அதிகம்.பயோடீசல் மக்களிடையே நன்கு அறிமுகப் படுத்தப்பட்டு இதற்கான தேவை அதிகரிக்கும் போது அதன் தயாரிப்பு செலவு வெகுவாக குறையும்.
மாணவர்களின் கவலை :
இது ஒரு நல்ல முயற்சி!ஆனால் இப்போதும் பொதுமக்களிடையே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் அப்படியே தான் இருக்கிறது.எங்கள் கல்லூரி விடுதியிலும் கூட அப்படித்தான் செய்கிறார்கள்,இது தவறு,மறுபடி மறுபடி ஒரே எண்ணெயை காய்ச்சிக் கொண்டே இருந்தால் எண்ணெய்யின் கொழுப்பு விகிதம் கூடிக் கொண்டே தான் செல்லும்,இது உடல் நலனுக்கு கெடுதல்.ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கீழே கொட்டுவது வீண் என்று நினைத்தால் அதை பயோடீசலாக மாற்றலாம்.பயன்படுத்திய எண்ணெய்க்கான தட்டுப்பாடு இந்த முயற்சிக்கான முதல் தடை.அடுத்த தடை முக்கிய இடுபொருளான மெத்தனால் விலை அதிகம்.இந்த சிறு சிறு தடைகளைத் தாண்டி எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.தற்போது லிட்டர் 76 ரூபாய்க்கு கிடைக்கக் கூடிய இந்த பயோடீசல் வரும் காலத்தில் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு விலை குறையலாம் என்கின்றனர்.
சோதனை வெற்றி :
பழைய புல்லட் ஒன்றில் தொடர்ந்து சில நாட்கள் இந்த பயோடீசலைப் பயன்படுத்திப் பார்த்த போது அதனால் ஏற்படும் வாகன மாசு விகிதம் வெகுவாக குறைந்திருந்தது ,மேலும் அதிக மைலேஜுடன் எரிபொருளும் குறைவாகவே தேவைப்பட்டது .தற்போது பெரிய அளவில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.