இனி நீங்கள் ப்யூட்டி பார்லரைத் தேடி அலைய வேண்டாம்! உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் மொபைல் பார்லர்!

ஒரு ஃபோன் செய்தால் போதும். பால், காய்கறி, பலசரக்கு, உணவு, குடிதண்ணீர், மருந்து வகையறாக்கள் வீட்டுக்கு உடனே வந்துவிடும்.
இனி நீங்கள் ப்யூட்டி பார்லரைத் தேடி அலைய வேண்டாம்! உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் மொபைல் பார்லர்!

ஒரு ஃபோன் செய்தால் போதும். பால், காய்கறி, பலசரக்கு, உணவு, குடிதண்ணீர், மருந்து வகையறாக்கள் வீட்டுக்கு உடனே வந்துவிடும். அப்படி காலமும் அதன் கோலமும் மாறியிருந்தாலும், போன் செய்தால் பியூட்டீஷியன் வருவார்... ஆனால் "அழகுநிலையம்' வீடு தேடி வருமா..? "வரும்' என்கிறார் ஸ்ரீதேவி.

வீட்டில் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் என்றால் பியூட்டீஷியன் வீட்டுக்கு வந்து அலங்காரம் செய்துவிட்டுப் போவார். வீட்டில் விசேஷம் இல்லாத போது, பொதுவாக நாம்தான் முடி வெட்ட அல்லது தலை முடியை கூந்தலைச் சீர் செய்து கொள்ள, ஃபேஷியல், கூந்தலை சுருட்டிவிட, கோடு போல நீட்ட , சாயம் பூசிக் கொள்ள, புருவங்களை சீராக்க, பிளீச்சிங் செய்ய.. அழகுநிலையம் நோக்கிப் போக வேண்டும். வீட்டிலும், வெளியிலும் வேலைப் பளு உள்ள ஆண், பெண்களுக்கு பல்வேறு சிகை, முக அலங்காரம் செய்து கொள்ள விருப்பம் இருந்தாலும், நேரம் கிடைக்காததால் "நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள். அப்படியே அழகு நிலையம் தேடிச் சென்றாலும், பல நேரங்களில் அரைமணி நேரமாவது காத்திருக்க வேண்டி வரும். 

இந்த நடைமுறை சிரமங்களை தவிர்த்து, எப்போது வேண்டுமோ அப்போது போன் செய்தால் உடனே நடமாடும் அழகுநிலையத்தை வீட்டுக்கு கொண்டுவந்து அழகு சேவைகளைச் செய்து முடிக்கிறது ஸ்ரீதேவியின் "கியூ 3 சலூன்'. டெம்போ வாகனத்தை ஒரு நட்சத்திர அழகு நிலையமாக மாற்றி கோவை நகரை வலம் வரச் செய்திருக்கிறார் ஸ்ரீ தேவி.

அழகு தொடர்பான அனைத்து சேவைகளும் மெனிக்யூர், பெடிக்யூர் உட்பட எங்கள் அழகு நிலையத்தில் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏசி செய்யப்பட்டு, டிவி, சொகுசு இருக்கைகள், வருடும் இன்னிசை... தரமான அழகு பொருள்கள், கூந்தலைக் கழுவ தண்ணீர் வசதி... இருக்கும் Q3 அழகு நிலையத்தின் கட்டணங்களும் கட்டடங்களில் இயங்கிவரும் அழகு நிலையங்களின் கட்டணங்களும் ஏறக்குறைய ஒன்று போலவே அமைந்திருக்கின்றன. சிகை அலங்காரத்திற்காக இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும், நடமாடும் அழகு நிலையத்தில் பணி புரிகின்றனர். ஸ்ரீதேவி சொல்கிறார்: "கல்லூரியில் படிக்கும் போதே புறத் தோற்றத்தை மேன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வு வந்துவிடும். அது எனக்கும் வந்தது. படிப்பு முடிந்ததும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை. பிறகு திருமணம். மகன் பிறந்தான். சுமார் ஏழாண்டுகள் பணிபுரிந்ததில், புறத் தோற்றத்தை ரம்மியமாக வைத்துக் கொள்வதில் பணிக்கு குறிப்பாக ஐடி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆண்களிடத்திலும் இந்த விழிப்புணர்வு வந்துள்ளது. அதனால் அழகுநிலையங்களுக்கு நல்ல வருமானம். அதனால் இந்தத் துறையில் நுழைய தீர்மானித்தேன். மும்பையில் இரண்டாண்டு காலம் அழகைப் பராமரிக்கும் கலையைப் பயின்றேன்.

 2008- இல் கோவையில் சலூன் ஒன்றைத் தொடங்கினேன். அந்த அனுபவத்தில் அழகு நிலையத்திற்கு வந்து போவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உணர்ந்தேன். வீட்டிலிருந்து அழகுநிலையத்திற்கு வர ஆகும் ஸ்கூட்டி, ஆட்டோ, கால்டாக்சி செலவு .. சின்னதா மேக்கப் போட்டுக் கொள்ளணும்... எல்லாவற்றிற்கும் மேலாக நேரம் வேணும். இவற்றைத் தவிர்க்க அழகுப்படுத்திக் கொள்ளும் சேவைகள் தேவை என்பவர்களுக்கு வீட்டிற்கு அருகே, அல்லது வீட்டு காம்பவுண்டுக்குள் நடமாடும் அழகுநிலையத்தைக் கொண்டு சென்றால் என்ன என்று மாற்றி யோசித்தேன். Q3 நடமாடும் அழகுநிலையம் பிறந்தது. ஒரே நேரத்தில் மூன்று பேர் செய்து கொள்ளும் வசதி உள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட குடும்பமே நேரவிரயமின்றி சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம். 

பெண்கள் கல்லூரியின் விடுதிகளில் விடுமுறை நாட்களில் அழகு நிலையம் போக பல மாணவிகள் அனுமதி கேட்கிறார்கள். மாணவிகள் வெளியே போய் வருவதில் பாதுகாப்பு பிரச்னை, அப்படி வெளியே போவதற்கு அனுமதி தருவதில் உள்ள தயக்கம் போன்ற சிரமத்தைத் தவிர்க்க எங்கள் நடமாடும் அழகு நிலையம் உதவுகிறது. அழைப்பின் பேரில் எங்கள் நடமாடும் அழகுநிலையம் மாணவிகள் விடுதிக்கே செல்கிறது. 

திருமணங்களின் போது மணமகன் மணமகள் இவர்களுக்கு அலங்காரம் செய்வதுடன், திருமணத்தில் கலந்து கொள்ளும் இரு வீட்டார் பெண்களுக்கும் கல்யாண மண்டபத்தில் அலங்காரம் செய்து கொள்ளும் வாய்ப்பினை நடமாடும் அழகு நிலையம் வழங்குகிறது. 

கோவையில் நடமாடும் அழகுநிலையத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இன்னொரு நடமாடும் அழகுநிலையம் விரைவில் அறிமுகமாகும். கோவையை அடுத்துள்ள நகரங்களுக்கும் நடமாடும் அழகுநிலையங்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்'' என்கிறார் ஸ்ரீதேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com