புளியமுத்து வடை! வித்யாசமான சிறுதீனி... எப்படிச் சுடுவதென தெரிந்து கொள்ளுங்கள்.

புளிய முத்தை வைத்துப் பல்லாங்குழி ஆடுவார்களெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதோ முதல் முறையாக அதை வைத்து வடையும் சுடலாம் எனத் தெரியவந்திருக்கிறது.
புளியமுத்து வடை! வித்யாசமான சிறுதீனி... எப்படிச் சுடுவதென தெரிந்து கொள்ளுங்கள்.

புளிய முத்தை வைத்துப் பல்லாங்குழி ஆடுவார்களெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதோ முதல் முறையாக அதை வைத்து வடையும் சுடலாம் எனத் தெரியவந்திருக்கிறது.

வாசகர்களும் கூட மசால் வடை, மெதுவடை சாப்பிட்டிருப்பீர்கள் புளியமுத்தில் வடை சுட்டுச் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள் இல்லையா? 

கிராமங்களில் கூட புளியமுத்தை அவித்தும், வறுத்தும் சாப்பிடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வடை சுட்டு சாப்பிடுவதெல்லாம் இதுவரை நான் அறிந்திராத செய்தி. 

புளிய முத்து
புளிய முத்து

இதுவரை வாழை மரம் ஒன்று தான் அதன் தண்டு, இலை, பூ, காய், நார் எனப்பலவிதமாகவும் முழுமையாக மனிதர்களுக்குப் பயன் தருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.... இதோ அந்த வரிசையில் இப்போது புளியமரத்தையும் சேர்க்கலாம். புளிய மரத்தின் பழங்கள், காய்கள், இலைகள், விதைகள், மரத்தண்டுகள் என எல்லாமுமே மனிதர்களுக்குப் பயன்படத்தான் செய்கிறது.

அதனால் தான் இப்போதும் கூட கிராமப் புறங்களில் புளியமுத்து பொறுக்கி விற்பதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதி மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் புளியமுத்தில் பல்வேறு விதமான மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட விதைகளை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. பழத்தை மட்டும் பயன்படுத்தி விட்டு முத்தைக் கீழே வீசி விடுகிறோம். இல்லையேல் விதை நீக்கப்பட்ட புளி வாங்கிச் சமைக்கிறோம்.

புளியம்பழம்
புளியம்பழம்

தேவையான பொருட்கள்:

  • புளிய முத்து : 4 கப்
  • உளுந்தப் பருப்பு: 1 கப்
  • பெருஞ்சீரகம்: 1 டீஸ்பூன்
  • இஞ்சி: 1 துண்டு
  • சின்ன வெங்காயம்: 10
  • பச்சை மிளகாய்: 8 அல்லது தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை: 2 ஆர்க்
  • உப்பு: தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய்: 4
  • எண்ணெய்: பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

புளிய முத்திலிருந்து முதலில் தோல் நீக்கப்பட வேண்டும். அது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். இரண்டு மூன்று முறை புளிய முத்தை உரலில் இட்டு இடித்து, முறத்தால் புடைத்து எடுத்தால் தான் அதன் தோல் நீங்கும். இப்படி தோல் நீக்கிய விதைகளை சுமர் 15 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய புளிய விதைகளை மறுநாள் எடுத்து நீரை வடித்து உலர்த்தி எடுத்து ஆட்டுரலில் இட்டு ஆட்டி எடுக்க வேண்டும். கிரைண்டரிலும் ஆட்டலாம். கெட்டியாக ஆட்டி எடுக்க வேண்டும். தண்ணீர் நிறையச் சேர்க்கக் கூடாது. புளிய விதைகளை ஆட்டி எடுத்துக் கொண்ட பின். நல்ல தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்திருக்கும் உளுந்தப் பருப்பை எடுத்து அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுக்கவும். அதைத் தொடர்ந்து பெருஞ்சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுத்துக் கொண்டு முதலில் ஆட்டிய புளிய விதை மாவு மற்றும் உளுந்து மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். இப்போது எஞ்சியிருக்கும் காய்ந்த மிளகாய், மிச்ச, சொச்ச கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் கலந்து, தேவையான உப்பையும் போட்டு பிசைந்து சிறிது சிறிதாக வடை தட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இதற்கும் தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்னி வைக்கலாம். மொறு, மொறுவென நாக்குக்கு ருசியாக இருக்கும்.

புளியமுத்தின் மருத்துவ பலன்கள்...

  • ஜீரண சக்திக்கு நல்லது.
  • மலச்சிக்கலை தீர்க்கும்.
  • புளிய விதையில் இருக்கும் பாலிஃபீனாலிக் கூட்டுப் பொருட்கள் பெப்டிக் அல்சரின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.
  • புளியம் பழத்தில் இருக்கும் ஃபிளேவனாய்டுகள் இதயநலனுக்கு நெருக்கமானவை. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கின்றன.
  • இதில் பொட்டாசியச் சத்து அதிகமிருப்பதால் பிளட் பிரஸ்ஸைரை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com