புதுசாத்தான் இருக்கு இந்த கற்றாழைக் காரக் குழம்பு!

கற்றாழை உடல் சூட்டைக் குறைக்க வல்லது. இதை அப்படியே பச்சையாக ஸ்லைஸ் செய்து உண்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி உண்ண முடியாதவர்கள் இப்படிக் குழம்பு வைத்தும் கூட சாப்பிட்டுப் பழகலாம்
புதுசாத்தான் இருக்கு இந்த கற்றாழைக் காரக் குழம்பு!

சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து முகத்தில் தடவிக் கொள்வார்கள், தலையில் தடவி ஊற வைத்து தலைக்கு குளிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது கொஞ்சம் புதுசு தான். கற்றாழை ஜெல் எடுத்து அதைக் கொண்டு காரக்குழம்பு செய்வதை யூடியூப் சேனல் ஒன்றில் கண்டேன். அவர்கள் அதில் 10 பேருக்குச் சமைத்தார்கள். நாம் இப்போது 4 பேருக்கு கற்றாழை காரக்குழம்பு எப்படிச் செய்வது என்று பார்ப்போம். நான்கு பேருக்குச் சமைக்க 2 கற்றாழை மடல்கள் போதும்.

கற்றாழை ஜெல்...
கற்றாழை ஜெல்...

தேவையான பொருட்கள்:

  • சோற்றுக் கற்றாழை மடல்கள்: 2
  • சின்ன வெங்காயம்: 1/4 கிலோ
  • பூண்டு: 1/4 கிலோ (நசுக்கியது)
  • தக்காளி: 3
  • புளி: எலுமிச்சை சைஸ் (ஊற வைத்துக் கரைசலை வடித்து எடுத்துக் கொள்ளவும்)
  • சீரகம்: 1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம்: 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள்: சிறிதளவு
  • மிளகாய்த்தூள்: 2 டீஸ்பூன்
  • செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்: 1/4 லிட்டர்
  • உப்பு: தேவையான அளவு
  • கறிவேப்பிலை & கொத்துமல்லி  தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை:

கற்றாழை மடல்களை முதலில் செடியிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெட்டுவது என்றால் அடி நுனியில் இருந்து அப்படியே முழுதாக மடல்களைப் பிய்த்து எடுத்துக் கொண்டு அதன் நுனியில் இருந்து வடியும் மஞ்சள் நிறத் திரவம் முழுதாக வடிந்து நீங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். அடுத்ததாக கற்றாழை மடல்களை மண், தூசு போகத் தண்ணீரில் நான்கைந்து முறை கழுவி எடுத்துக் கொண்டு தோலை நீக்கி விட்டு மீடியம் சைஸ் துண்டுகளாக அரிய வேண்டும். பிறகு மீண்டும் நல்ல தண்ணீரில் ஏழுமுறை அலசி கடைசி முறைக்கு கொஞ்சம் கல் உப்பு பிசிறி விட்டு கழுவ வேண்டும்.

பின்னர் அடுப்பைப் பற்ற வைத்து அதில் வாணலியை ஏற்றி கொஞ்சம் எண்ணெய் விட்டு வெந்தயத்தை பொன் வறுவலாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் கொஞ்சம் கடலை எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து முதலில் நசுக்கிய பூண்டைப் போட்டு வதக்கவும். பூண்டு பொந்நிறமாக வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் இளஞ்சிவப்பு நிறம் நீங்கி பொன்மஞ்சம் நிறம் வந்ததும் அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், சீரகத்தூள், மசாலாத்தூள், உப்பு சேர்த்து நங்கு பிசிறி விட்டு மசாலா நன்கு சேர்ந்ததும் நறுக்கிய சோற்றுக் கற்றாழை ஜெல் துண்டையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். கற்றாழை ஜெல் வேகச் சற்று நேரம் ஆகலாம். பரவாயில்லை. ஜெல்லில் உள்ள நீர் வற்றி கற்றாழை நன்கு வேகும் வரை குழம்பைக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கற்றாழை ஜெல் வெந்ததும் அதனுடன் புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் குழம்பு சுண்டி வரும் வரை மூடி போட்டு வேக விட்டு அடுப்புத் தணலை குறைத்து விடுங்கள்.

10 நிமிடம் கழித்துப் பார்த்தால் குழம்பில் எண்ணெய் மிதக்கத் தொடங்கி இருக்கும்... இது தான் கற்றாழை காரக்குழம்பிற்கான இறக்கும் பக்குவம். இப்போது குழம்பில் மேலாக ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு நன்கு கொதித்து வரும் போது நறுக்கிய கொத்துமல்லித் தளைகளைத் தூவிப் பரிமாறலாம். குழம்பு அருமையான சுவையில் சாப்பிட மீன் குழம்பு போல அபார சுவையில் இருக்கும்.

பலன்கள்:

கற்றாழை உடல் சூட்டைக் குறைக்க வல்லது. இதை அப்படியே பச்சையாக ஸ்லைஸ் செய்து உண்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி உண்ண முடியாதவர்கள் இப்படிக் குழம்பு வைத்தும் கூட சாப்பிட்டுப் பழகலாம். உடல் நலனுக்கு மிகவும் உகந்தது இந்த கற்றாழை காரக்குழம்பு.

நகரங்களில் வசிப்பவர்களுக்குத் தான் இது புதுசே தவிர, கிராமத்தினர் இப்போதும் கூட இதையெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். என்ன ஒரு கஷ்டம் என்றால்; இதை வாரம் இருமுறை செய்து சாப்பிடுவது கூட சிரமம் தான் வேண்டுமானால் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை மெனக்கெட்டு செய்து சாப்பிட்டுப் பார்கலாம்.

இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் கற்றாழை மடல் மற்றும் ஜெல் இரண்டுமே பெண்களுக்கு உரியது. அதன் அடிக்கட்டை மட்டுமே ஆண்களுக்கு உரியது என்பது. அந்தக் கிழங்கைக் காய வைத்துப் பொடி செய்து அந்தப் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com