கடும் ஜலதோஷமா? மஞ்சள் கலந்த பூண்டுப்பால் அருந்துங்கள் உடனடி ரிலீஃப்!

இதில் மஞ்சள் தூள் விரலி மஞ்சளில் அரைத்த தூளாக இருந்தால் நல்லது. கடைகளில் விற்கும் ரெடிமேட் மஞ்சள் தூள் வகையறாக்கள் வேண்டாம்.
கடும் ஜலதோஷமா? மஞ்சள் கலந்த பூண்டுப்பால் அருந்துங்கள் உடனடி ரிலீஃப்!
Published on
Updated on
2 min read

கிறிஸ்துமஸுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது இந்த ஜலதோஷ அவஸ்தை. இந்தாண்டு டிசம்பர் மாதத் துவக்கமே கடுங்குளிருடன் தான் ஆரம்பமானது. இதோ ஜனவரி கழிந்து ஃபிப்ரவரி தொடங்கவிருக்கும் இப்போது கூட நமது வீடுகளில் ஏ சி க்கு வேலையற்றுப் போன சீதோஷ்ணம் தான் இன்று வரையிலும் நிலவுகிறது. அதிகாலைப் பனியோ ஊட்டி, கொடைக்கானலை நினைவுறுத்தும் வகையில் மிகக்கொடுமையாக ஸ்வெட்டர் இல்லாத சருமம் தாங்க முடியாத அளவுக்கு சோதிக்கிறது. இன்னும் வீடுகளில் ஜலதோஷத்தால் இருமிக் கொண்டும், தொண்டையை கனைத்துக் கொண்டும் செருமிக் கொண்டும் இருப்பவர்கள் அனேகம் பேர்.

சாதரணமான ஜலதோஷம் என்றால் வாரம் பத்து நாட்களில் சீராகி விடும். ஆனால் இம்முறை கடுங்குளிர் நிலவியதால் பலருக்கு மாதக்கணக்கில் ஜலதோஷம் குணமான பாடில்லை. சரி இதற்கு என்ன தான் தீர்வு? அவ்வப்போது டாக்டரிடம் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வைத்தால் ஆயிற்றா? குணமாகனுமே?! அதிலெல்லாம் குணமாகவில்லை என்றால் பாட்டி வைத்தியத்தையும் கொஞ்சம் முயன்று பார்க்கலாமே. அதில் பக்கவிளைவுகள் எதுவும் இருக்கப் போவதில்லை என்பதால் பின்பற்றுவதற்கும் எளிதானதே!

மஞ்சள் கலந்த பூண்டுப்பால் ரெஸிப்பி

தேவையான பொருட்கள்:

  • பால்: 1 கப்
  • பூண்டு: 1 பல்
  • மஞ்சள்தூள்: 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1 கப் பாலை அடுப்பில் ஏற்றி கொதிக்க வைக்கவும். பால் கொதித்து வரும் போது அதில் உரித்த பூண்டுப்பல் ஒன்றைப் போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பூண்டு மசியும் அளவுக்கு பால் கொதித்து வந்ததும் இறக்கி பூண்டை நன்றாக மசித்து பாலோடு சேர்த்து சற்று ஆற வைத்து நாக்கு பொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன் அப்படியே எடுத்து அருந்த வேண்டியது தான். இதில் மஞ்சள் தூள் விரலி மஞ்சளில் அரைத்த தூளாக இருந்தால் நல்லது. கடைகளில் விற்கும் ரெடிமேட் மஞ்சள் தூள் வகையறாக்கள் வேண்டாம்.

பலன்:

  • தொடர்ந்து ஒருவாரம் இரவுகளில் இப்படி மஞ்சள் கலந்த பூண்டுப்பாலை அருந்தி வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
  • மஞ்சள் உடல் உள்ளுறுப்புகளில் இருக்கும் புண்களை ஆற்றவல்லது.
  • பூண்டுக்கு வாதத்தைப் போக்கும் சக்தி உண்டு. அத்துடன் பால் உடல் குளிர்ச்சியை சீராக்கி குடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
  • ஜலதோஷத்துடன் வறட்டு இருமலும், தொண்டைக்கட்டும் சேர்ந்து கொண்டு அவஸ்தப் படுபவர்கள் மஞ்சள் கலந்த வெந்நீரில் தினமும் ஒருமுறை வாய் கொப்பளித்து வந்தால் அதற்கும் உடனடி பலன் கிடைக்கும்.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com