மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் தரமாக எங்கு கிடைக்கும் என்று தேடி வாங்கி வைத்துக் கொண்டு நல்ல வெயில் நேரமாகப் பார்த்து சற்று நேரம் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ஈரப்பதம் இன்றி பொருட்கள் வறுப்பதற்குத் தோதாக அமையும். அடுப்பில் வாணலியை ஏற்றி மிதமான தீயில் முதலில் கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை வறுக்க வேண்டும். இறக்குவதற்கான அறிகுறி இடு பொருட்கள் பட படவென வெடிக்கும் பக்குவத்தில் இருந்தால் போதும். நிலக்கடலை, பொட்டுக்கடலை, அவல் எல்லாம் வெடிக்காது அவை நிறம் மாறினாலே போதும் இறக்கி விடலாம். பார்லியும், ஜவ்வரசியும் கூட இப்படித்தான். ஆளி விதை, வெள்ளை எள், கச கசா மூன்றையும் வறுக்கும் போது கவனம் தேவை கருக விடாமல் மெல்லிய தீயில் வறுக்க வேண்டும். பாதாம், முந்திரி, பிஸ்தாவுக்கும் அதே தான். கருக விடாமல் வறுத்து எடுக்கவேண்டும். சுக்கை வறுத்த பின் மருந்தரைக்கும் கல் அல்லது பூரிக்கட்டையால் இடித்து நசுக்கி வைத்துக் கொள்வது நல்லது. ஜாதிக்காயை உடைத்து ஓடு நீக்கி உள்ளிருக்கும் சக்கையை நசுக்கிய பின் வறுக்க வேண்டும். கடைசியாக குங்குமப்பூவை வறுக்கத் தேவை இல்லை அப்படியே சேர்க்கலாம்.