முன்பெல்லாம் தீபாவளிக்கு வீட்டுப் பலகாரங்கள் தான் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நகரின் பிரபலமான பட்சணக் கடைகள் அனைத்துமே தீபாவளி ஸ்பெஷல் பட்சணங்கள் செய்து அவற்றைப் பெரும் விளம்பரங்கள் வாயிலாக ஆரவாரமாக விற்பனை செய்யவும் தொடங்கி விட்டதால் தீபாவளிக்கு முதல் நாள் வரை அலுவலகப் பணிகளில் மூழ்கிக் கிடக்கும் இல்லத்தரசிகளில் பலர் மறுநாள் அதிகாலையில் எழுந்து மாங்கு மாங்கென்று பலகாரம் சுட்டுக் கொண்டிருக்க மலைத்துப் போய் பேசாமல் கடைகளில் ஆர்டர் செய்து தாங்களும் ருசித்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். பேஷ்...பேஷ் இது நல்ல ஐடியாவா இருக்கே என்று தோன்றினாலும், என்ன இருந்தாலும் கடைகளில் பலகாரம் சுடுபவர்களுக்கு வீட்டு மனிதர்களுக்கு இருக்கும் ஐ மீன் அம்மா, பாட்டிகளுக்கு இருக்கும் ஆரோக்ய மனப்பான்மை இருக்குமா என்பது சந்தேகம் தான் இல்லையா? அதற்காக கடைப் பட்சணங்களை ஒரேயடியாகத் தவிர்த்து விடவும் முடியாதே! அம்மாதிரியான நேரங்களில் நமக்கு ஆபத்பாந்தவனாக கை கொடுப்பவை தான் தீபாவளி லேகியங்கள்.