வாழ்க்கைப் பாதையில் ‘டாப் கியரில்’ முன்னேற வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள்!
முயற்சி செய்யுங்கள். முடிந்தவற்றைப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை நலமானதாகவும், வளமானதாகவும் அமைவது உங்களது திறன்களிலேயே அடங்கியிருக்கின்றது.


இன்றைய கல்வி என்பதும் வாழ்க்கை என்பதும் வேறு வேறாகவே உள்ளன. எனவே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கொடுக்கப்படும் கல்வியை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, உங்களது வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களையும் (Life Skills) கற்றுக் கொள்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் கிடைக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டியது கட்டாயமாகும்.
இன்றைய இளந்தலைமுறையினர் பெற்றுக் கொண்டிருக்க வேண்டிய திறன்கள்
Communication Skills: பேசும்பொழுது பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். கலந்துரையாடல், மேடைப் பேச்சு ஆகியனவும் இந்தப் பகுதியில் வளர்த்துக் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க திறன்களாகும்.
Reading and Writing Skills: பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பல தகவல்களைத் தருகின்ற பலதரப்பட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டும். பொது அறிவு என்பது இதன் மூலமே கிடைக்கும். அத்துடன் எழுதிப் பழக வேண்டும். உங்களது தாய் மொழியில் கடிதம், கட்டுரை, செய்தி போன்றவற்றை தினசரி எழுதிப் பழக வேண்டும்.
Numeracy Skills: மனக்கணக்கு முறை மறந்துபோன ஒன்றாகிவிட்டது. இதனை பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடத்திட்டத்தில் வரும் கணிதம் என்பது வேறு. தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் கணக்கு என்பது வேறு. மனதிற்குள் விரைவாகக் கணக்குப்போடும் திறன் வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Management Skills: அலுவலகம் மற்றும் தொழிலகங்களில் மட்டுமல்ல, குடும்பத்திலும் நிர்வாகம் என்பது சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் என்று நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அவர்களது செயல்பாடுகளையும் மேலாண்மை செய்வதற்கு திறம்பட பழகியிருக்க வேண்டும்.
Learning from Failure: ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் சரியான படிப்பினையைக் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டு, அடுத்த முறை அந்தத் தவறை செய்யாமல் சரியானபடி வெற்றி பெற வழியைக் காண முடியும்.
Handling Money: பணத்தைக் கையாளும் திறன் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். கல்வி கற்கும் காலத்தில் பொதுவாக மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கான வரவு என்பது அறியப்படாமலேயே இருக்கின்றது. குறிப்பாக பெற்றோரின் கடினமான, வியர்வை சிந்திபெற்ற உழைப்பினால் கிடைத்ததாக அந்த வரவு இருக்கும். தங்கள் உடமைகளை விற்று பணம் அனுப்பும் பெற்றோரும் உண்டு. எனவே சிந்தித்து சரியான செலவுகளை மட்டும் மேற்கொள்ளப் பழக வேண்டும். இது எதிர்காலத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பொழுது வீண் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
Follow Good Manners: நல்ல பழக்க வழக்கங்கள் அந்த நாட்களில் வீடுகளில் கற்றுக் கொடுக்கப்பட்ட அடிப்படை பாடங்களாகும். ஆனால் இன்றைய நாட்களில் அவற்றைச் சொல்லிக் கொடுக்க மூத்தோரும் இல்லை. பெற்றோருக்கு நேரமும் இல்லை. காலை எழுந்தவுடன் வணக்கம் சொல்வது, பல் துலக்கிய பிறகே தண்ணீராக இருந்தாலும் அருந்துவது, தெரிந்த நபர்களைக் கண்டால் குறைந்தபட்சமாக புன்னகைப்பது, அலுவலகங்களில் வாடிக்கையாளருடன் முறையாகக் கை குலுக்குவது, உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு சிரித்துப் பேசுவது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்களை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
Finding a Job: படிப்பின் முடிவில் வேலை தேடுவதற்கு முழுமையான திறன் அவசியமாகும். வேலை தேடுதலின் முதல் நிலையான தன் விவரக்குறிப்பு (BIO-DATA) தயாரித்தல் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆசிரியர்கள், பெற்றோர், மூத்த மாணவர்கள், நண்பர்கள் மூலம் இதுபற்றி அறிந்து பழகிக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
Self Defense: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தற்காப்புப் பயிற்சி என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். முறையான தற்காப்புப் பயிற்சி கொடுப்பவர்களிடம் சேர்ந்து பயின்று கொள்ளுவது பலவகைகளில் உதவியாக இருக்கும்.
Home Repair: வீடுகளில் பல்வேறுவிதமான சிறுசிறு பழுதுகள் ஏற்படுகின்றன. மின்விளக்கு பழுதாகுதல், இணைப்பில் தொல்லை, குழாய் அடைப்பு, கழிவுநீர் குழாய் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பழுதுகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டியுள்ளது. ஆனால் இன்றைய நாட்களில் சிறு வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள், சேவையளிப்போர் எவரும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பது அரிது . சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன்பிறகு பழுதுநீக்குவோர் கிடைத்தாலும் அதற்காக அவர்கள் கேட்கும் கட்டணம் மிக அதிகமாகவே இருக்கும். இவற்றைத் தவிர்க்க வீட்டில் ஏற்படும் பழுதுகளை நீக்க, வீட்டிற்குத் தேவையான மராமத்து பணிகளை நாமே செய்து கொள்ள பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
Car and Two Wheeler Repair: வாகனங்களில் பயணிப்பது தவிர்க்கவியலாததாகிவிட்டது. திடீரென வாகனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றைத் தற்காலிகமாகவாவது சரிசெய்யத் தேவையான அடிப்படைப் பயிற்சியை பழகி வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
முயற்சி செய்யுங்கள். முடிந்தவற்றைப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை நலமானதாகவும், வளமானதாகவும் அமைவது உங்களது திறன்களிலேயே அடங்கியிருக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...