எங்கெங்கும் அனிமேஷன்!
தமிழில் 2014, 2015ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்களில் கணினி வரைகலை நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அனிமேஷன் என்பது தற்போது ஒளி-ஒலி ஊடகத்திற்கு அடிப்படையாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதாவது திரைப்படம் என்ற பெரிய திரை மற்றும் சின்னத்திரை என்று குறிப்பிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற இரண்டிலும் அனிமேஷன் தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.
என்றாலும் தற்போதைய அனிமேஷன் என்பது பல நிலைகளில், பல்வேறு விளைவுகளைக் கொடுப்பதாக வளர்ந்துவிட்டது. அனிமேஷன் என்ற சொல்லே மறைந்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (இதனை சுருக்கமாக சிஜி என்று குறிப்பிடுகின்றனர்) என்ற சொல்லமைப்பு உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பது தற்போது பல வழிகளில் பயன்படுத்தப்பட்டாலும் குறிப்பாக மூன்றுவிதங்களில் பயன்பாட்டில் உள்ளது. முதலாவது, முழு நீள அனிமேஷன் படங்கள் என்பனவாகும். இவை ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்டதைப் போலவே இருந்தாலும், செயல்பாடுகளிலும், விளைவுகளிலும் பெரிய வளர்ச்சியும் மாற்றமும் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஸ்ரெக், ஃபைண்டிங் நீமோ, டாய் ஸ்டோரி போன்ற ஆங்கில முழு நீள அனிமேஷன் திரைப்படங்களைக் கூறலாம்.
இரண்டாவது, மனித கதாபாத்திரங்களின் செயல்களுக்கும், காட்சிகளுக்கும் உயர்வு கொடுக்கவும், உயிர் கொடுக்கவும் உதவுகின்ற விதத்தில் காட்சி அமைப்புகளில் கணினி வரைகலை பயன்படுத்தப்படுகிறது. பின்புலம் உள்ளிட்ட பல அமைப்புகளில் கிராபிக்ஸ் அமைப்புகள் கொடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஏராளமான ஆங்கிலப் படங்களையும், தமிழில் தற்போது எடுக்கப்படும் பல படங்களையும் சொல்லலாம். குறிப்பாக, சூப்பர்மேன், ஸ்டார் வார்ஸ், மேட்ரிக்ஸ், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.
மூன்றாவது, மனித கதாபாத்திரங்களும், கணினியில் உருவாக்கிய கிராபிக்ஸ் கதாபாத்திரங்களும் இணைந்து வரும் காட்சிகளை உருவாக்குவது அல்லது மனித கதாபாத்திரங்களை கணினி வரைகலை மூலமாக வேறு உருவத்திற்கு மாற்றிக் காட்டி அசைவூட்டம் கொடுப்பது. மிகவும் கடினமான, பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட இதுவே தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிக்கும் நிறைய திரைப்படங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். சில ஆங்கிலத் திரைப்படங்கள் : டெர்மினேட்டர், ரோஜர் ரேபிட், ஐ ரோபோட், ஜூராசிக் பார்க்.
தமிழ்த் திரைப்படங்களிலும் அனிமேஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1981இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த, "கழுகு' என்ற திரைப்படத்தின் டைட்டில் பகுதி முழுவதும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுக் காட்டப்பட்டது.
முதன் முதலாக இந்தியத் திரைப்படங்களில் பாடல் காட்சியில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் மனிதர்கள் இணைந்து நடித்த காட்சி இடம்பெற்றது, "ராஜா சின்ன ரோஜா' என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியாகும். இந்தப் பாடல்காட்சியில், முயல், யானை, கரடி, நரி, பறவைகள் போன்ற விலங்குகளுடன் நடிகர்கள் இணைந்து நடித்திருந்தார்கள். ரஜினி முயலுடன் கைகுலுக்கும் காட்சி அன்றைய நாட்களில் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகும்.
தமிழில் 2014, 2015ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்களில் கணினி வரைகலை நன்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழில் கணினி வரைகலைப் பயன்பாட்டைத் துவக்கியவர் இயக்குநர் ஷங்கர் ஆவார். தனது துவக்க கால படங்களிலேயே பெரிய அளவில் கம்ப்யூட்டர் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். காதலன், ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ் போன்ற படங்களிலும் சமீபத்தில் வெளிவந்த சிவாஜி, எந்திரன், ஐ போன்றவற்றின் வெற்றியில் கணினி வரைகலையின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றால் மிகையில்லை.
சமீபத்தில் வெளிவந்த புலி என்ற திரைப்படத்தில் கணினி வரைகலை நன்கு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. முழு நீளப் படங்களாக மட்டுமல்லாது, சின்னத்திரைக்காக பல அனிமேஷன் தொடர்களும், படங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக குழந்தைகளை மகிழ்விக்கும் பல அனிமேஷன் தொடர்களைக் கூறலாம். போக்கிமான், பென்10, டோரா, சோட்டா பீம் உள்ளிட்ட பல அனிமேஷன் தொடர்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இவை தவிர, சின்னத்திரை உள்ளிட்டவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள் என்பவை ஏதேனும் ஒரு வகையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நுட்பத்தைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. ஷாம்பூ, பற்பசை, எண்ணெய், பெயின்ட், பல்ப், கார், இருசக்கர வாகனம், டெலிவிஷன், வலைதள வாணிபம் என்று எந்த வகை விளம்பரமாக இருந்தாலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இவற்றில் பயன்படுத்தப்படுவது மிக உயர்ந்த தொழில்நுட்பமாகும். என்றாலும் இவற்றை உருவாக்குவதற்கு கணினி வரைகலை மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும், அவற்றைச் சரியான அளவில் கொடுத்து உருவாக்குவது, மனித உழைப்புதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
கணினி தொழில்நுட்பமும், மென்பொருள் திறனும் அதிகமாக வளர்ந்துள்ளது என்றாலும் அவற்றைச் சரியான இடத்தில், சரியான தரத்தில், சரியான அளவில், முறையாக பயன்படுத்துவது மனித மூளை என்பதை மறுப்பதற்கில்லை. எத்தனை கணினிகள் வந்தாலும், கணினி தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனித வளம் என்பதே அவற்றைக் கட்டுப்படுத்தி செயல்பட வைக்கிறது என்பதே உண்மை. அந்த மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்தி வளர்ச்சியடைய வேண்டியது நமது கடமையாகும்.
இனி வரும் நாட்களில் கணினி வரைகலை என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகவே இருக்கும். கணினி வரைகலையைக் கற்றுக் கொண்டால், வேலை வாய்ப்பு நிச்சயம் என்று உறுதியாகக் கூறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...