கால்களில் முடியோடு ஷூ விளம்பரத்தில் நடித்ததால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஸ்வீடிஷ் பெண் மாடல்!

அர்விதா, தனது கால் சருமத்தில் இருக்கும் மென்முடிகளை சவரம் செய்யாமல் அப்படியே இயற்கையாக முடியோடு இருக்கும் அந்தக் கால்களோடு அடிடாஸ் ஷூக்களை அணிந்து விளம்பரத்தில் நடித்திருந்தார்.
கால்களில் முடியோடு ஷூ விளம்பரத்தில் நடித்ததால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஸ்வீடிஷ் பெண் மாடல்!
Published on
Updated on
2 min read

அர்விதா பிஸ்ட்ரம், 26 வயது ஸ்வீடிஷ் பெண் மாடல். சமீபத்தில் பிரபல ஷோ பிராண்டுகளில் ஒன்றான அடிடாஸ் தனது புதிய விளம்பரமொன்றில் நடிக்க அர்விதாவை ஒப்பந்தம் செய்தது. அந்த விளம்பரத்தில் புதுமையாக இருக்குமென்று எண்ணி அர்விதா, தனது கால் சருமத்தில் இருக்கும் மென்முடிகளை சவரம் செய்யாமல் அப்படியே இயற்கையாக முடியோடு இருக்கும் அந்தக் கால்களோடு அடிடாஸ் ஷூக்களை அணிந்து விளம்பரத்தில் நடித்திருந்தார். நடித்தது மட்டுமல்லாமல், அந்த விளம்பர வீடியோவையும், புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில், இதைக் கண்டு கடுப்பான சில ஆண்கள், கால்களில் முடியோடு ஒரு பெண், ஷூ விளம்பரத்தில் நடித்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மிக, மிக மோசமாக அர்விதாவுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான கமெண்ட்டுகளை அள்ளித் தெளித்து விட்டனர்.

இதைக் கண்டு அதிர்ந்து போன அர்விதா, ஏன் ஒரு பெண்ணுக்கு, அவள் மாடலாக இருந்த போதிலும், தான் நடிக்கும் விளம்பரத்தில் எப்படித் தோன்ற வேண்டும் என்ற உரிமை இல்லையா? அவளென்ன அடிமையா? உலகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விரும்பும் விதமாகத் தான் அவள் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமென்று சட்டமா என்ன? என்று கொதித்துப் போய் கேள்வி எழுப்பி இருக்கிறார். அர்விதாவின் இந்த கொதிப்பான கேள்விக்கு 21,000 இன்ஸ்டாகிராம் பயனாளிகள் விருப்பக் குறியிட்டு வரவேற்றுள்ளனர்.

அது மட்டுமல்ல அர்விதா, தனக்கு வந்த பாலியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தனது கருத்தை யூடியூபில் வீடியோ பதிவாகவும் வெளியிட அந்த வீடியோவும் 5 லட்சம் முறை பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப் பட்டு பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அர்விதா; 

‘பெண்ணியம் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். எல்லாப் பெண்களுக்குமே தங்களது பெண்மைக்குரிய செயல்களைச் செய்யும் உரிமை உண்டு. ஆகவே நான் பெண்மையுடன் இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வர வர சமூக ஊடகங்களில் எந்தெந்த பிரச்னைகளை எல்லாம் வைரலாக்குவது? என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இது எங்கே போய் நிற்கிறது என்றால் புதுமை என நினைத்துக் கொண்டு இப்படிப் பட்ட விளம்பரங்களில் நடிக்கும் மாடல்களுக்கு எல்லாம் சமூக ஊடங்களில் மோசமான பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையில் வந்து நிற்கிறது. அவரென்ன செய்வார் பாவம்?! விளம்பர இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தானே அர்விதா செய்திருக்க முடியும்?! 

அர்விதா ஒரு மாடல் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த புகைப்படக்காரராகவும், கலைஞராகவும் கூட தனது திறமையை நிரூபித்தவராம்.

Image courtesy: Evening standard.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com