இது ஒரு சுவாரஸ்யமான சிங்கப்பூர் சினிமா கதை!

என் பெயர் லிம்ஜைலே. என் அத்தை டெர்ரி. அவளை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்
இது ஒரு சுவாரஸ்யமான சிங்கப்பூர் சினிமா கதை!

என் பெயர் லிம்ஜைலே. என் அத்தை டெர்ரி. அவளை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்...

ஓர் ஆண்டுக்கு முன்னால் டெர்ரியை அம்மாதான் வேலைக்கு அமர்த்தினாள். நாங்கள் பௌத்தர்கள். பணியின் நிமித்தம் வேலைக்கு வந்த என் அன்புக்குரிய அந்தப் பெண் கிறிஸ்தவ பெண்மணி. பக்தி விசுவாசம் உள்ள பெண். அவள் வீட்டு வேலைக்குச் சேர்ந்ததுமே என் அம்மா லெங் அவளிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டாள்.

 டெர்ரிக்கு வயது இருபத்தைந்து இருக்கும். மிகவும் பணிவுள்ள வேலைக்காரி.

 எனக்கு வயது எட்டு. பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன்.

அப்பா ஒரு கம்பெனியில் வியாபார பிரதிநிதியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அம்மாவிற்கு, ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட்டாக வேலை. எங்களுக்குச் சொந்தமாக  ஃப்ளாட் இருந்தது. டெர்ரி வேலையில் சேரும்போது அம்மா கர்ப்பிணி. தனக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அம்மா கடவுளை வேண்டிக் கொண்டாள்...

டெர்ரி எங்கள் வீட்டில் ஒரு வருடம்தான் வேலை பார்த்தாள். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் என் மேல் அபரிமிதமான அன்பைப் பொழிந்தாள். என் அம்மா லெங் எப்படி என்னை நேசித்தாளோ அப்படி என்னை டெர்ரி நேசித்தாள். அவளை நான் அத்தை என்று பேரன்புடன் அழைத்தேன்.

 வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளுக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் மெல்ல மெல்லத் தன் நன்னடத்தையால் டெர்ரி என் மனதில் இடம் பிடித்தாள்...

சைக்கிளை முரட்டுத்தனமாக ஓட்டி நான் ஆக்ஸிடெண்டுக்கு ஆளானேன். வலது கை எலும்பு முறிந்துவிட்டது. அப்போது எனக்கு எல்லா வேலைகளையும் டெர்ரிதான் செய்தாள். என்னை குளிப்பாட்டி விட்டாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்று என்னை சமாதானப்படுத்தினாள். எனக்குச் சோறு ஊட்டி விட்டாள்.

அப்பாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் அம்மா கண்டித்ததால் சிகரெட் பிடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தினார். ஆனால் ஆண்டுகள் பல சென்றபின்

அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைபிடிக்க ஆரம்பித்தார். நான் சின்னப் பையனாக இருந்தாலும் எனக்கும் சிகரெட் பிடிக்கும் ஆசை ஏற்பட்டது.

அம்மாவின் மேக்கப் பெட்டியைத் திறந்து அத்தை டெர்ரி லிப்ஸ்டிக் எடுத்து அம்மாவுக்குத் தெரியாமல் உதட்டில்  பூசிக் கொள்வது உண்டு.

நான் டாய்லட் அறைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல்  சிகரெட் குடிக்கப் பழகினேன்.

ஒருநாள் அம்மா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்...

எனக்குத் தெரியமால் என் மேக்-அப் பாக்ûஸத் திறந்து பார்க்கிறாய்! இல்லையா? என்று டெர்ரியிடம் கேட்டாள்.

'சாரி மேடம்' என்றாள் டெர்ரி.

'புகை பிடிக்கும் பழக்கம் வேறு உனக்கு

இருக்கிறது'

'சத்தியமாக இல்லை மேடம்! நான் புகை பிடிப்பது இல்லை'

'டாய்லட் அறையில் ஒரு காகிதத்தில் நான்கைந்து சிகரெட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்'.

என் அப்பா அந்தச் சமயம் பார்த்து அங்கு வந்தார். 'டாய்லட்  ரூமில் இருந்தது நான் புகைக்கும் சிகரெட்டுகள்''  என்றார் அப்பா. அம்மா அப்பாவைத் திட்டத் தொடங்கினாள்.

நான் லாட்டரிச் சீட்டில் ஆர்வம் உள்ளவன். லாட்டரி பற்றி வரும் செய்திகளைக் கத்தரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைத்துக் கொள்வேன். என் தாத்தா சமாதிக்குச் சென்றால் எனக்குப் பரிசுச் சீட்டில் - பரிசு விழவேண்டும் என்று தாத்தாவை வேண்டிக்கொள்வேன்.

டெர்ரிக்கு சிகை அலங்காரக்கலை நன்றாகத் தெரியும். ஓய்வு கிடைக்கும் போது ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று முடிவெட்டி சம்பாதிப்பாள்.  கிடைத்த பணத்தில் எனக்கும் பரிசு பொருள்கள் வாங்கி வருவாள். தனது குடும்பத்தாருடன் சில சமயம் டெலிபோனில் பேசுவது உண்டு டெர்ரி.

அன்று நான் வகுப்புத் தோழனிடம்  என் அத்தை டெர்ரியைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருந்தேன்.

'உன் அம்மாவிடம் கை நீட்டிக் காசு வாங்கிக் கொள்கிறாள் இல்லையா டெர்ரி. அதனால்தான் உன் மீது பாசத்தைப் பொழிவதுபோல் நடிக்கிறாள். உண்மையில் உன் மீது அவளுக்கு அன்பு இல்லை' என்று என் தோழன் சொன்னதும் அவன் மீது பாய்ந்து காட்டுத்தனமாகத்

தாக்கினேன். அவன் மண்டை சுவரில் மோதியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.

பள்ளி நிர்வாகம் கொதித்தது. என் அம்மாவை அழைத்து வரச் சொன்னார்கள். நான் அத்தை டெர்ரியை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையைச் சந்தித்தேன்.

லிம் ஜெலே பொல்லாத போக்கிரி. சக மாணவனை ரத்தம் வரும்படி அடித்தான். அவன் பள்ளியைவிட்டு விலக்கி வைக்கப்படுகிறான்'' என்றார் அவர்.

மிஸ். தயவு செய்து லிம் ஜெலேயை பள்ளியைவிட்டு விலக்கி வைக்கவேண்டாம். மறுபடியும் இதுபோல அசம்பாவிதம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று டெர்ரி எனக்காகக் கண்ணீர் விட்டாள்.

மறுநாள் பள்ளி துவங்கு முன் கடவுள் வணக்கம் முடிந்ததும் சக மாணவர்கள் முன்னால் நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.

ட்ரில் மாஸ்டர் என்னைக் கையை நீட்டச் சொன்னார். சுளீர் சுளீர் என்று பத்துப் பிரம்படிகள். அதனால் ஏற்பட்ட வலியை விட

மொத்த பள்ளி மாணவர்களும் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்ததால் ஏற்பட்ட அவமான உணர்ச்சிதான் என்னைக் கொன்று தின்றது.

டெர்ரி, ஹாலின் ஓரத்தில் இருந்து  இந்தப் பிரம்படி வைபவத்தைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் வெள்ளம். அன்று மாலை நான் வீடு திரும்பியதும் என் அன்பு அத்தை டெர்ரி என் கைகளுக்கு மருந்து தடவினாள்...

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அம்மா லெங், பாஸ்போர்ட்டை டெர்ரியிடம் திருப்பிக் கொடுத்தாள். அப்பாவுக்கு வேலை போய் இருந்த நேரம், தன்னை வேலையைவிட்டு நிற்கச் சொல்கிறார்கள் என்பதை என் அன்பு அத்தை டெர்ரி புரிந்து கொண்டாள். அவள் விமான நிலையம் செல்ல நாள் குறிக்கப்பட்டது.

 நான் லாட்டரி டிக்கெட் வாங்க ஓடினேன். பரிசு கிடைக்கவில்லை. பெரிய பரிசுத் தொகை கிடைத்து இருந்தால் அத்தையை வீட்டோடு இருக்கச் செய்து இருப்பேன். அன்று எல்லோரும் விமான நிலையத்திற்கு  காரில் கிளம்பினோம். அத்தை டெர்ரி காரைவிட்டு இறங்குமுன் அவள் முடிக் கற்றையில் இருந்து சிறு பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொண்டேன். அம்மா என்னைத் திட்டினாள். அத்தை என் அன்பைக் கண்டு நெகிழ்ந்தாள். விமானம் டெர்ரியை ஏற்றிக் கொண்டு பறந்தது.

 கர்ப்பிணியாக இருந்த என் தாயார்  ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றாள். தங்கச்சிப் பாப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com