Enable Javscript for better performance
மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டீர்களா?- Dinamani

சுடச்சுட

  
  im2

  வலைதளத்திலிருந்து...
  ஹாலிவுட் படமா அல்லது ஹார்பிக் விளம்பரமா என ஐயுறும் வகையில் அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் புதிய மெட்ரோ ரயில் நிலையத்தை! தரையைப் பார்த்து தலைவாரலாம், வாரிய தலையை சரி பார்க்கலாம்! காணுமிடமெல்லாம் வடநாட்டு முரட்டு செக்யூரிட்டிகள். எங்கு நோக்கினும் அழகழகான இளம் பிஞ்சு மகளிர் சிப்பந்திகள், அமெரிக்கா போவதற்கு கூட இவ்வளவு சோதனைகள் இருக்குமா தெரியவில்லை, ஆனால் எத்தனை படிகள், எத்தனை தடைகள், எத்தனை கேள்விகளை தாண்ட வேண்டியிருக்கிறது, அரும்பாக்கம் போகிறோமா? அல்லது அண்டார்டிகாவுக்கான சாகசப் பயணமா என்கிற சந்தேகம் எழுந்தபடியேயிருந்தது! 

  பத்து படிகளுக்கும் கூட எஸ்கலேட்டர் வசதி. ஒற்றை மாடிக்கே லிஃப்ட் வசதி! டிக்கட் எடுக்க தானியங்கி இயந்திரம், மிச்சக் காசை புத்தம் புது பத்துரூபாய் காயின்களாகவே அள்ளித்தருகிறது. எங்கு பார்த்தாலும் எதையாவது எழுதி எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள்! தமிழ், இங்கிலீஷ் இந்தி என மும்மொழி கொள்கை! ஆனால் இன்னமுமே அதிகப் பயணிகள் பயணிக்க ஆரம்பித்துவிட்டதாய் தெரியவில்லை. நான்கு கிலோமீட்டர் ரயில் பயணத்திற்கு இரண்டுகிலோமீட்டர் நடக்கவும் சுற்றவும் படியேறவும் இறங்கவும் என சிந்துபாத் பயணமாக இருப்பதால் அப்படி இருக்கலாம். கூடவே எக்கச்சக்கமான டிக்கட் விலையும். ஒரு வேளை சென்னை முழுக்க எல்லா பாதைகளும் தயாராகி இணைக்கப்பட்டுவிட்டால் இனிக்குமோ என்னமோ! 

  கவனித்ததில் இந்த ரயில்களில் ஓர் ஏழையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கு மட்டுமல்ல ரயில்நிலையம் இருக்கிற ஏரியாவிலும் கூட! மிக நன்றாக சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்! 
  http://www.athishaonline.com

  ***

  முக நூலிலிருந்து....
  • செல்ஃபியால்
  அழியும்
  அரியவகை உயிரினம்...
  மனிதன்.
  - நடராஜன் சுந்தரபுத்தன்

  • ஒவ்வொரு நாள் 
  தொடங்கும்போதும் 
  "இன்றே இப்படம் கடைசி' என்று 
  எண்ணி நடத்தியும்... 
  ஒழுங்காய் முடிந்ததில்லை 
  ஒருநாள் வாழ்க்கையும்! 
  - நா.வே.அருள்

  • மரணத்தைப் பற்றி
  எனக்குக் கவலையில்லை...
  நான் இருக்கும் வரை
  அது வரப்போவதில்லை...
  அது வரும்போது, 
  நான் இருக்கப் போவதில்லை.
  - மிடறு முருகதாஸ்

  • வளைந்து கொடுப்பது தவறல்ல.... 
  எங்கே ஏன் என்பதைப்
  புரிந்து வளைந்து கொடுங்கள்.
  - ஆண்டாள் ப்ரியன்

  • வனம் அழி.
  பூமியை நெகிழியில் புதை.
  கடும் புனல் கண்டு அழுது புலம்பு.
  ஒவ்வொரு பூதமாய் சிதை.
  ஒவ்வொரு பூதமும்
  உன்னைச் சிதைக்கும்!
  - நேசமிகு ராஜகுமாரன்

  சுட்டுரையிலிருந்து...
  • கல்வி கற்க 
  புத்தகங்களை விட
  "நோட்டுக்களே' 
  அதிகம் தேவைப்படுகின்றன!
  - செங்காந்தள்

  • செருக்கும், செருப்பும்,
  காலுக்கு கீழே இருந்தால்தான்
  மதிப்பு!
  - ஜினோ

  • வாழ்வதற்கான செலவு 
  ரொம்ப கம்மி...
  அடுத்தவன் போல்
  வாழ்வதற்கான செலவுதான் 
  அதிகம்.
  - ஆதிரன்

  • கிணற்றில் தள்ளியவனைத் தெரியாது....
  ஆனால் "நீந்த' கற்றுக் கொண்டேன்...
  வாழ்க்கைக்
  கடலில் தள்ளியவர்களை
  தெரியும்... 
  "சுமை' தூக்கத் தெரிந்து கொண்டேன்...
  வாழ்க்கையை கற்று முடிந்தபாடில்லை. 
  - சவேதி 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai