பொதுவெளியில் பேசத் தயக்கமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!

இன்று நல்ல பல கல்லூரிகளில் இருந்தும், நல்ல கிரேடில் பட்டதாரிகள் உருவாகி வந்தாலும்,
பொதுவெளியில் பேசத் தயக்கமா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!
Published on
Updated on
2 min read

இன்று நல்ல பல கல்லூரிகளில் இருந்தும், நல்ல கிரேடில் பட்டதாரிகள் உருவாகி வந்தாலும், அவர்களில் பலரும் வேலை கிடைக்காமல் சிரமப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது, அவர்களிடம் பொது இடங்களில், நான்கு பேர் மத்தியில் பதட்டமின்றி பேசும் திறன் (Public Speaking Skill) இல்லை என்பதே!

ஓர் இளைஞருக்கு இந்த திறன் இருந்தால், அது அவரின் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு, வணிக ஒப்பந்தம், பதவி உயர்வு ஆகியவற்றுக்கான வாய்ப்பை 4 மடங்காக உயர்த்துகிறது. ஆனால், இன்றைய கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் இத்தகைய மென்திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

உங்கள் பணிக்குரிய நேர்முகத் தேர்வு, ஒரு பணிக்குழு அல்லது நிறுவன தலைவர்கள் அடங்கிய குழு முன்னால் நடத்தப்படலாம். அப்போது, உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், ஒரு தொழில் திட்டம் குறித்து அந்த குழு முன் நீங்கள் விளக்கும் சூழல் ஏற்படும். அல்லது, அந்த குழுவில் உள்ள ஒரு முக்கிய நபரின் கருத்துக்கு வலு சேர்த்து பேசும் நிலை உங்களுக்கு வரலாம். அச்சமில்லாமல் பேசும் திறனின்றி இவை போன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பது சாத்தியமில்லை.

இன்றைய நிலையில், பொதுவெளியில் அச்சமின்றி பேசுபவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வு வழியாக நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவியுள்ளனர். கல்வி, வணிகம், தொழில், விளம்பரம் என அவர்களின் செயல்பாடு இல்லாத இடமே இல்லை என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான பேச்சாளர்களுக்கு நம் நாட்டில் மட்டுமல்லாது, பெரும்பாலான அயல்நாடுகளிலும் பெரும் வரவேற்பு, மரியாதை உள்ளது. தங்களின் முயற்சி மற்றும் திறனால் மக்களை நல்வழிப்படுத்தி, நெறிப்படுத்தும் நல்ல பேச்சாளர்கள் எப்போதும் பொக்கிஷமாக மதிக்கப்படுகின்றனர். 

ஒருவரிடமுள்ள இந்த பேச்சுத் திறன், இவர்களைத் தலைமைப் பண்புள்ளவர்களாகப் பிரித்துக் காட்டுகிறது. பொதுவெளியில் பேசுவதற்கான வாய்ப்புகள் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு திறந்தே இருக்கின்றன. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டால், பெரிய பொறுப்புகள் மற்றும் திறன்கள் நம்மை தேடிவரும்போது, அதை நிர்வகிக்க நாம் சரியான நபர் என்ற நம்பிக்கை நம் மனதில் ஏற்படும்.

பொதுவெளியில் அச்சமின்றிப் பேசும் திறன் நிலையான பயிற்சியாலும், சரியான வழிகாட்டுதலாலுமே உருவாகிறது. பல பெரு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், கருத்தரங்கு நிறுவனங்கள், வர்த்தக காட்சி மாநாடு, லாப நோக்கமற்ற நிறுவனங்கள் போன்றவை தங்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நம்பிக்கையூட்டுவதற்கும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் பேச்சுத் திறன்மிக்கவர்களின் உதவியை நாடுகின்றன. மேலும், உலகம் முழுவதும் பரவியுள்ள பேச்சாளர் பணியகங்கள் (Speakers Bureaus) மூலம் இந்த பேச்சாளர்கள் மக்களைச் சென்றடைய முடியும்.

இவர்களுக்கான வருவாய் அவர்களின் நிபுணத்துவத்துக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் அமைகிறது. உலகின் எந்த பகுதியிலும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறமுடியும்.

பெரும்பாலான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பொதுவெளியில் பேசுபவர்களுக்குத் தேவையான ஆளுமை மேம்பாடு, பண்பு சீராக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட திறன்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் அதையும் ஒரு பாடமாகக் கருதி கடந்து சென்றுவிடுகின்றனர். இந்தத் திறன்களில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பு மிக எளிதாகிவிடும்.பேச்சுத் திறனில் கூடுதல் ஆர்வம், தகவல் தேடல், வாசிப்பு, சமூக அக்கறை, சகிப்புத் தன்மை, தன்முன் உள்ள மக்களின் மனங்களை ஊடுருவி அவர்களின் தேவையை அறிந்துகொள்ளும் பண்பு போன்றவை ஒரு பேச்சாளருக்கான குறைந்தபட்ச இலக்கணமாகக் கருதப்படுகிறது. 

இன்று நம் நாட்டிலும், சர்வதேச அளவிலும் பொது பேச்சுப் பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில், WABSTALK, PEPTALK, Indian Academy, SSA Academy, Bishal Sarkar, Anurag Aggarwal Institute போன்றவையும், சென்னையில், Ramanathans Institute, Sulekha, UrbanPro, ActionDna போன்ற தனியார் நிறுவனங்களும், இணையம் வழியாக  Edx, Udemy, GoSkills, Coursera போன்ற நிறுவனங்களும் பொது பேச்சுத் திறன் பயிற்சியை அளித்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com