பரவை முனியம்மாவின் கோரிக்கை நிறைவேறுமா?!

அவரது நாட்டுப்புறப் பாடல் சேவையைக் கருத்தில் கொண்டு ரூ 6 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாகவும், மாதம் தோறும் ரூ 6000 உதவித் தொகையாகவும் கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
paravai muniyamma
paravai muniyamma

பரவை முனியம்மாவைத் தெரியாதவர்கள் யார்? ‘தூள்’ திரைப்படத்தில் ‘சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி’ பாடலைப் பாடி தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் பரவை முனியம்மா. நாட்டுப்புற இசைப் பாடகியான இவர், ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். அதுவே அவருக்குத் தொழிலாகவும் இருந்த வந்த நிலையில் தான், இயக்குனர் தரணியின் கண்களில் பட்டு திரையுலகில் நுழைந்தார். தூள், ஏய் படங்களில் நாயக், நாயகிகளின் பாட்டியாக நடித்து தூள் கிளப்பவும் செய்தார்.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சமையல் நிகழ்ச்சியொன்றிலும் தொடர்ந்து இடம்பெற்று கிராமத்துச் சமையல் செய்து காட்டிக் கொண்டிருந்தார். 

மதுரைப் பக்கம் ‘பரவை’ கிராமத்தைச் சேர்ந்தவரான முனியம்மா, தற்போது உடல்நலக் குறைவால் அவதிப் பட்டு வருகிறார். வயோதிகத்தின் காரணமான இந்த உடல்நலக்குறைவால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகி வரும் பரவை முனியம்மா, தன் காலத்திற்குப் பிறகு மாற்றுத்திறனாளியான தனது மகன் என்ன செய்வார்? அவரது வாழ்க்கை என்னவாகுமோ? என்ற கவலைக்கு ஆளாகியுள்ளார். அது குறித்த கடும் மன உளைச்சலில் இருக்கும் பரவை முனியம்மா தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, பரவை முனியம்மாவின் கஷ்ட ஜீவனத்தை அறிந்து அவருக்கு அவரது நாட்டுப்புறப் பாடல் சேவையைக் கருத்தில் கொண்டு ரூ 6 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாகவும், மாதம் தோறும் ரூ 6000 உதவித் தொகையாகவும் கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அந்த உதவித் தொகை இதுநாள் வரை சரியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது தனக்கு உடல்நலக் குறைவு அதிகமாகி விட்டபடியால், தன் காலத்திற்குப் பிறகும் அந்தத் தொகையை மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு தமிழக அரசு வழங்கினால் தன்னுடைய மனக்கவலை அகலும் எனக் கூறியுள்ளார் பரவை முனியம்மா.

பரவை முனியம்மாவின் கோரிக்க நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இது குறித்து தமிழக அரசு சார்பில் பதிலொன்றும் இதுவரை தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com