இறந்து விட்டதாகக் கருதி எரியூட்டும் முன் திடீரென உயிர்த்தெழுந்த ஒதிசா மனிதர்!

இறுதிச் சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி விட்டு முடிவில் எரியூட்டுவதற்காக கொள்ளி தயார் செய்து பிணத்தின் அருகே கொண்டு சென்ற போது திடீரென சிம்மாஞ்சல் மாலிக்கிடம் அசைவு தென
இறந்து விட்டதாகக் கருதி எரியூட்டும் முன் திடீரென உயிர்த்தெழுந்த ஒதிசா மனிதர்!

ஒதிஷாவில் 52 வயது ஆண் ஒருவர் கடந்த 12 தேதி பிற்பகலில் காணாமல் போனார். ஆட்டுக்கிடை போடும் தொழில் செய்து வந்த அவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்த அவர் அங்கிருந்து பின்னர் வீடு திரும்பவில்லை. ஊரெங்கும் அவரைத் தேடி அழைந்தனர் உறவினர்களும், ஊர்க்காரர்களும். 12 ஆம் தேதி காணாமல் போன சிம்மாஞ்சல் மாலிக் எனும் அந்த நபர் மீண்டும் 13 ஆம் தேதி மாலையில் மேய்ச்சலுக்குச் சென்ற காட்டுப்பகுதியில் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதை உறவினர்களில் ஒருவரான முரளி மாலிக் கண்டு வந்து ஊராரிடமும், உறவினர்களிடமும் தெரிவிக்கவே.. அவர்கள் காட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிம்மாஞ்சல் மாலிக் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அவரது உடலில் இல்லை. மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடந்தவரை இறந்து விட்டார் என எண்ணி ஊருக்குள் எடுத்து வந்து குடும்பத்தினர் அனுமதியுடன் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர் ஊர்ப்பொதுமக்கள்.

இறுதிச் சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி விட்டு முடிவில் எரியூட்டுவதற்காக கொள்ளி தயார் செய்து பிணத்தின் அருகே கொண்டு சென்ற போது திடீரென சிம்மாஞ்சல் மாலிக்கிடம் அசைவு தென்பட்டிருக்கிறது. வாயால் மூச்சு விட முனைந்திருக்கிறார் அவர். பிணமென்று நினைத்தவரிடம் அசைவைக் கண்டதும் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற ஊர்ப்பொதுமக்களும், உறவினர்களும் உடனடியாக அவரை சிதையில் இருந்து விடுவித்து சோதித்துப் பார்த்த போது தான், அவர் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கிறார் எனத் தெரிய வந்திருக்கிறது.

உயிருடன் இருக்கும் மனிதரை எரிக்க முற்பட்டதை எண்ணி நாணிய உறவினர்கள், அவரிடம் நடந்ததை வினவ, ஆடுகளை மேய்க்கக் காட்டுப் பகுதிக்குச் செல்லும் போது தனக்கு காய்ச்சல் இருந்ததாகவும், தொடர்ந்து நான்கு நாட்களாகக் காய்ச்சலில் இருந்ததால் அப்போதே தான் மிகவும் சோர்வுற்று இருந்த நிலையில் திடீரென நினைவு தப்பி காட்டில் மயங்கி விழுந்து விட்டதாகவும், மீண்டும் நினைவு திரும்பியது தான் எரியூட்டப்படவிருக்கையில் தான் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். இதைக் கேள்விப்பட்டதும், நல்ல வேளையாக சிதையில் வைத்து எரியூட்டப்படுவதற்கு முன்பாவது அவருக்கு சுயநினைவு திரும்பியதே, இல்லாவிட்டால் உயிருடன் இருப்பவரை எரித்த பாவம் தங்களை வந்தடைந்திருக்குமே என்றெண்ணி உறவினர்களும், ஊர்ப்பொதுமக்களும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

Image courtesy: News18.tamil

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com