அசுரனைத் தொடர்ந்து திரைப்படமாக்கத் தகுதி வாய்ந்த 7 நல்ல நாவல்கள் லிஸ்ட்!

இதோ தமிழ் சினிமா இயக்குநர்களின் பார்வைக்கு சில நல்ல தமிழ் நாவல்கள் லிஸ்ட்..
அசுரனைத் தொடர்ந்து திரைப்படமாக்கத் தகுதி வாய்ந்த 7 நல்ல நாவல்கள் லிஸ்ட்!

கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையேயும், விமர்சகர்களிடையேயும் கனத்த வரவேற்பைப் பெற்றுள்ள அசுரன் திரைப்படத்தைப் பற்றி தினமொரு பாராட்டு தினமொரு பிரபலத்திடம் இருந்து குவிந்து வரும் நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்களிடையே நல்ல நாவல்களைப் பற்றிய தேடல்கள் அதிகரித்திருக்கலாம் என்றொரு நம்பிக்கை வலுக்கிறது. ஏனெனில், அசுரன் திரைப்படத்தின் மூலக்கதையானது எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இத்தனை காத்திரமான நாவலை உள்வாங்கி அதன் சாரம் குறையாமல் அதே வேகத்துடனும், வலியுடனும், நியாயங்களுடனும் படமாக்க வல்ல இயக்குனர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் நிரூபித்துள்ளார். அத்தகைய அருமையான படைப்புகளை அதன் கனம் குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்தத்தக்க திறன் வாய்ந்த நடிகர்களும் நம்மிடையே உண்டு என்பதை தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழில் கதை பஞ்சம் ஏற்பட்டாற் போல மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் கதைகளை ஒழித்துக்கட்டி விட்டு இனி இயக்குநர்கள் நல்ல கதைகளை நமது நூலகங்களில் தேடத் தொடங்கினால் என்ன? என்று தோன்றுகிறது.

இதோ தமிழ் சினிமா இயக்குநர்களின் பார்வைக்கு சில நல்ல தமிழ் நாவல்கள் லிஸ்ட்..

  1. வாடிவாசல் (சி.சு.செல்லப்பா) ராஜமெளலி போன்ற திறமையான நல்ல இயக்குனர்களின் கையில் சிக்கினால் இந்தக் கதை வசூல்ரீதியாக மிக அருமையான வெற்றிப்படமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
  2. சாயாவனம் (ச.கந்தசாமி) அதென்னவோ தெரியவில்லை, இந்த நாவல் மட்டும் ஒரு நல்ல இயக்குநரின் கையில் கிடைத்தால் நிச்சயம் ஒரு மாற்று சினிமா கிடைக்குமென்று இதை வாசித்த நாள்முதலாகத் தோன்றிக் கொண்டே இருக்கிறது. எந்த விதத்தில் இது மாற்று சினிமாவாக இருக்குமென்பதை நாவலை வாசித்தவர்கள் உணரக்கூடும்.
  3. காடு (ஜெயமோகன்) மலையாள இயக்குனர்கள் யாரேனும் இதைப் படமாக்கினால் இயல்பு கெடாமல் இருக்கும்)
  4. யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்)
  5. ஈரம் கசிந்த நிலம் (சி ஆர் ரவீந்திரன்) கொங்கு நாட்டு மண் மணம் கமழக்கமழ இதை அருமையான திரைப்படமாக்கும் உத்தி தெரிந்த இயக்குனர்கள் கண்களில் இந்தக் கதை இத்தனை நாட்களாய் படாமலிருப்பது அதிசயம்.
  6. ரெண்டாம் மூலம் (தமிழில் - இரண்டாமிடம்) எம் டி வாசுதேவன் நாயர்... இதிகாசப் பின்னணியில் ஒரு அருமையான பீரியட் ஃபிலிம்.
  7. மலைக்கள்ளன் (நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை) இந்தக் கதையை முதன்முறை வாசிக்கும் போது எனக்கு எம் ஜி ஆர், பானுமதி எல்லாம் கண்ணில் படவே இல்லை (இது முன்பே திரைப்படமாகியிருக்கிறது) ஆனால், இன்றைய நவீன VFX தொழில்நுட்ப வளர்ச்சியின் வீச்சில் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினால் அலாவுதீனும் அற்புத விளக்கும் எல்லாம் இதற்கு முன் பிச்சை வாங்க வேண்டும். மிக அழகான கற்பனைக் கதவுகளை விரியச் செய்யும் அருமையான நெடுங்கதை இது. எடுத்த கையோடு வாசித்து முடிக்கும் அளவுக்கு அபாரமான எழுத்து. என்ன தமிழ் தான் 50 களின் தமிழாக இருக்கும். ஆனால், ரசனைக்கு மொழி எல்லாம் ஒரு விஷயமே இல்லை. கதை வெகு அழகானது. எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com