எச்சரிக்கை! காட்டில் குட்டி யானைகளுடன் எதிர்ப்படும் யானைக் கூட்டங்கள் ஆபத்தானவை!

பறவைகள், விலங்குகளுக்கும் கூட பாஷைகள் உண்டு. அவற்றுக்குள்ளும் குடும்பச் சண்டைகள் உண்டு. சர்வைவல் என்று சொல்லப்படக்கூடிய போட்டிகள் உண்டு.
எச்சரிக்கை! காட்டில் குட்டி யானைகளுடன் எதிர்ப்படும் யானைக் கூட்டங்கள் ஆபத்தானவை!

ஒரு புகைப்படக் கலைஞர் அதிலும் குறிப்பாக ஒரு கானுயிர் புகைப்படக் கலைஞர் இதைச் சொல்லும் போது நாம் அதை நிச்சயம் பொருட்படுத்தத் தான் வேண்டும். ஏனெனில், அவர் சொல்வது அறிவுரை அல்ல, அனுபவம்.

குழுவாகப் பயணிக்கும் யானைக்கூட்டங்களில் குட்டி யானைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்தல் என்பது மிகப்பெரிய நீதியாகப் பேணப்படும். அவற்றுக்கு ஏதாவது ஆபத்து விளைவிக்க வேண்டும் என்பதில்லை. யானைகள் கூட்டமாக அப்படிச் செல்கையில் நாம் ஒற்றை ஆளாகவோ அல்லது கும்பலாகவோ கூட காட்டில் அகப்பட்டுக் கொண்டால் தீர்ந்தோம். தங்களது பாதுகாப்புக்காக யானைகளை மனிதர்களைத் தாக்கத் தொடங்கி விடும்.

அதே போல சமவெளிகளில் வசிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கக் குடும்பங்கள் தனியாக வேட்டையாடுவதில்லை. பெரும்பாலும் பெண் சிங்கங்கள் வேட்டையாடுவதை ஆண் சிங்கங்கள் பகிர்ந்து உண்பதுண்டு. சிங்கங்கள் குடும்பமாக ஓய்வெடுக்கையில் மரத்தின் மேலிருந்து வயதான சிங்கங்கள் தூங்காமல் விழித்திருந்து தன் குடும்பத்தினருக்கு காவல்பணி செய்துண்டு.

புதிதாக ஒரு காட்டுப்பகுதியில் பிரவேசிக்கும் வேங்கைப்புலியானது, தன்னால் அங்கே நீடிக்க முடியுமா? அல்லது தன்னைக் காட்டிலும் வல்லவனான புலியொன்றின் ஆதிக்கத்தில் அல்லது கட்டுப்பாட்டில் அந்தப் பிரதேசம் இருக்கிறதா? என்பதைச் சோதித்தறிய மரத்தில் கால் நகக்குறியிட்டு கோடிழுத்துச் செல்லும் புத்திசாலித்தனமான நடைமுறைகளும் வேங்கைப்புலிகளுக்குள் உண்டாம். ஒருவேளை இதைக் காட்டிலும் பலசாலியான புலி அந்தப் பகுதியில் இருந்தால் அந்தப்புலி இந்தப்புலி கோடிழுத்த இடத்திற்கும் மேலே தனது பலத்தைக் காட்ட கோடிழுத்து விட்டுச் செல்லுமாம்.

இம்மாதிரியான தகவல்கள் எல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்கள் அறிந்திராதவை. 

இது மட்டுமல்ல, இது போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராதிகா ராமசாமி.

இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்றான வெங்கடாசலபுரத்தில் பிறந்தவரான இவர் பள்ளிப்படிப்பை தனது சொந்தக் கிராமத்தில் முடித்தவர். பின் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து எம்பிஏ பட்டமும் பெற்று டெல்லியில் பணி புரிந்தார். அங்கு வசிக்கும் போது துவங்கியது தான் கானுயிர் புகைப்படக் கலை மீதான ஆர்வம். புகைப்படங்கள் எடுப்பது சிறு வயதிலிருந்து இவருக்கு விருப்பமான பொழுது போக்காக இருந்து வந்தாலும் துறை சார்ந்து தனது ஆர்வத்தை இவர் அடையாளம் கண்டது டெல்லியில் வசிக்கத் தொடங்கிய போது தான். காரணம் வீட்டிலிருந்து சடுதியில் செல்லத்தக்க தூரத்திலிருந்த விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்களும் அந்தப் பறவைகள் எழுப்பிய சுதந்திர ஓசைகளும் தான். அப்படித் தொடங்கிய பின்னரே தெரிந்தது இந்திய அளவில் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் மட்டுமே நிபுணர்களைக் கொண்டுள்ள இத்துறையில் பெண்களுக்கான பங்களிப்பில் தான் தான் முதல் என்பது.

ஆயினும் அந்தப் பெருமையை தலைக்கேற்றிக் கொள்ளாமல் இன்றும் கூட ஒரு சிறுமிக்கான பூரிப்புடன் காடுகளில் தனக்கேற்பட்ட அனுபவங்களை நமக்குப் பாடங்களாக விவரிக்கிறார்.

பறவைகள், விலங்குகளுக்கும் கூட பாஷைகள் உண்டு. அவற்றுக்குள்ளும் குடும்பச் சண்டைகள் உண்டு. சர்வைவல் என்று சொல்லப்படக்கூடிய போட்டிகள் உண்டு. அத்தனையையும் மிக அழகியலோடு பதிவு செய்வதே ஒரு தேர்ந்த கானுயிர் புகைப்படக் கலைஞரின் மிகப்பெரிய சவால் என்கிறார் ராதிகா.

அவருடனான முழு நேர்காணலை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறது தினமணி.காம்.

பார்த்து விட்டு வாசகர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com