Enable Javscript for better performance
Dinamani.com's 'No Compromise' with actor JAYAPRAKSH- Dinamani

சுடச்சுட

  

  ஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 15th December 2018 05:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  actor_jayaprakash_11

   

  நடிகர் ஜெயப்பிரகாஷ் தினமணி.காமின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வாயிலாக பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஜெயப்பிரகாஷ், இயக்குனர் சேரனின் மாயக்கண்ணாடி திரைப்படம் மூலமாக ஒரு நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். சேரன் அவரது நெடுங்கால நண்பர் என்ற முறையிலும், ஜெயப்பிரகாஷ் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் ‘பொற்காலம்’ என்றொரு அருமையான திரைப்படத்தை வெற்றிப்படமாகவும் படைத்தளித்த உரிமை மற்றும் பெருமிதம் காரணமாகவும் ஜெயப்பிரகாஷை வற்புறுத்தி நடிகராக மாற்றி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் சேரனையே சேரும். அவரை மட்டுமல்ல இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் தனது நடிப்பை பட்டை தீட்டிக் கொள்ளும் வகையில் சிறந்த குணச்சித்திர வாய்ப்புகளை வழங்கிய இயக்குனர்களாக ஜெயப்பிரகாஷ் நினைவு கூர்ந்தது இயக்குனர் சுசீந்திரன், மிஷ்கின், நவீன் (மூடர் கூடம்) இயக்குனர் அருண்குமார்  (பண்ணையாரும் பத்மினியும்) மற்றும் இயக்குனர் சங்கர் (2.o) உள்ளிட்டோரை. இந்த இயக்குனர்களிடம் பணிபுரியும் போது தனது கதாபாத்திரங்கள் பெருமளவில் மக்கள் ரசிக்கத் தக்க விதத்தில் அமைந்திருந்ததால் தான் இன்று தான் மக்கள் தன்னை நடிகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

  ஒரு நடிகர், சிறந்த இயக்குனர்களின் பார்வையில் படும்போது தான் அவரது நடிப்பில் மெருகேற்றிக்கொள்ளத்தக்க ஆச்சர்யங்கள் நிகழ்கின்றன. நடிகருக்கு அத்தைகைய பெருமைகளை வழங்குவது இயக்குனரைப் பொருத்தது. அந்த வகையில் 2.o திரைப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமாருக்காக டப்பிங் பேச இயக்குனர் சங்கர் தன்னைத் தேர்வு செய்த விதத்தை ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொண்டார் ஜெயப்பிரகாஷ். அக்‌ஷய் கதாபாத்திரத்துக்காக டப்பிங் பேச இயக்குனர் சங்கர் தன்னை அழைத்த போது, முதல் முறை இயக்குனர் பேசிக் காட்டிய விதம் கண்டு தான் அதிர்ந்து போனதாகவும்... அத்தனை அருமையாக முழு ஆற்றலுடன் ஒரு ரோபோ போலவே பேச இயக்குனரால் முடிந்த அளவு தன்னால் முடியவே முடியாது என்று தான் அச்சப்பட்டதாகவும் அவரே பேசினால் தான் சரியாக இருக்கும் என அந்த முயற்சியில் இருந்து தான் பின்வாங்கிய போது இயக்குனர் சங்கர் முடிந்த அளவு தன்னை உற்சாகப் படுத்தி டப்பிங் பேச வைத்ததாகவும் அவர் கூறும் போது தயாரிப்பாகட்டும், நடிப்பாகட்டும், பின்னணியாகட்டும்... தான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வு தெரிய வருகிறது. இந்த உழைப்பு தான் ரசிகர்கள் ரசனையுடன் ஏற்றுக் கொள்ளும் நடிகர்களில் ஒருவராகும் வாய்ப்பை இவருக்கு வழங்கியிருக்கிறது.

  ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் திரையரங்குகளில் டிக்கெட் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், டிக்கெட் விலை எங்கே அதிகரித்திருக்கிறது? ஜி எஸ் டி எல்லாம் கவர்ன்மெண்ட் வரிக்குச் செல்கிறது. டிக்கெட் விலையால் ஏதாவதொரு தயாரிப்பாளரோ, திரையரங்கு உரிமையாளரோ லாபம் அடைந்திருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? இல்லை. இதெல்லாம் அரசுக்குச் செல்லும் வரி. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? உங்களது கேள்வி உண்மையாக இருக்கலாம். ஆனால் அது சிக்கலான கேள்வி. என்று அவர் சொன்ன விதத்தில் ஒரு முன்னாள் தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் தரப்பு நியாயம் புரிந்தாலும் இந்தப் பிரச்னையில் யார் நினைத்தாலும் ஒரு தெளிவான முடிவைக் கொண்டு வர முடியாத இயலாமையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

  தவிர... தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், திரைத்துறைக்குமான நேரங்களை எப்படிச் சரியான அளவில் பகிர்ந்தளிக்க முடிகிறது? நடிகர் ஜெயப்பிரகாஷ் இந்த விஷயத்தில் மேற்கொள்ளும் நோ காம்ப்ரமைஸ் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்...

  வாழ்க்கையில் நான் பின்பற்றக் கூடிய விஷயமாக மூன்று விஷயங்களைச் சொல்வேன். ஒன்னு பணம் வரனும் இல்லனா புகழ் வரனும் ரெண்டுமே சேர்ந்து வந்தா ரொம்ப சந்தோசம். இது எதுக்குமே வாய்ப்பில்லைன்னா அந்தப் படத்துல நான் ஏன் நடிக்கனும்? அதில் அர்த்தமில்லையே? வெளிவரக்கூடிய அத்தனை திரைப்படங்களிலும் நான்  இருந்தே ஆகவேண்டும் என்று பேராசைப் பட்டால் எல்லாவற்றிலும் போய் தலையை நுழைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை. என்ற அவரது பதில் அத்தனை நடிகர்களுக்குமானது. இந்தத் தெளிவு தான் இவர் நடித்த அத்தனை வேடங்களையுமே நமக்கு ரசிக்கத் தக்கதாக்கியிருக்கிறது.

  இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான பதில்களை தனது உரையாடலின் வழியாக மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

  முழுமையான உரையாடலை தினமணி.காம் யூ டியூப் சேனலில் வாசகர்கள் பார்த்து மகிழலாம்.

   

  தினமணி.காம் யூ டியூப் சேனலில் ஒவ்வொரு வெள்ளியன்றும் சிறந்த ஆளுமைகளின் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள் வெளியிடப்படுகின்றன.

  அடுத்த வெள்ளியன்று நம்முடன் உரையாடவிருப்பது பாடகி மற்றும் நடிகையான புவனா சேஷன் அவர்கள்.

  சுவாரஸ்யமான நேர்காணல்களைத் தொடர்ந்து கண்டு மகிழ தினமணி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ள மறவாதீர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai