தாம்பத்யம் சிறக்க இதை ட்ரை பண்ணுங்க!

‘இன்னா மேம், உம் புருஷன் ரொமான்ஸ் பண்ண உன்னைக் கூப்பிடாம வேற யாரைக் கூப்பிடுவார்? அதுக்கா இம்புட்டு கோவம்? என்று ஆறுதலாக வினவ; பிரச்னை ரொமான்ஸ் பண்றதுல இல்ல தங்சு, அதுக்கான மூட் கிரியேட் ஆக மாட்டேங்க
Romantic mood creation tips
Romantic mood creation tips

- தகவல் தங்கலட்சுமி

தனுஜாவுக்கு செம மூட் அவுட்.

‘ஏன்? என்னாச்சு?’

- என்றவாறு பக்கத்தில் வந்த தோழி அனுஜாவிடம் சுள்ளென எரிந்து விழுந்தாள்..

‘அடச்சே! என்னடி வாழ்க்கை இது?’

‘அம்மாடீ, நீ பாட்டுக்கு திடீர்னு இப்படி கொழுந்து விட்டு எரிஞ்சா, என்னடி அர்த்தம், எதுக்கு மூட் அவுட்ன்னு சொல்லு.’

‘அடப்போடீ, வீடு, ஆஃபீஸ், வீக் எண்ட் அவுட்டிங்ல ஒரு மூவி, இல்லனா ரெஸ்டாரெண்ட் இப்டி சுருங்கிப் போச்சே வாழ்க்கைன்னு நினைக்கறப்போ அப்படியே பத்தீட்டு வருது தெரியுமா.. வீட்டுக்குப் போனா குழந்தைங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும். அவங்க படிப்பு, புராஜெக்ட் வொர்க், எக்ஸாம்ஸ், மார்க்ஸ், டியூஷன்ஸ்ன்னு அங்கயும் இங்கயுமா பறந்து கடைசில தினமும் தூங்க அர்த்த ஜாமம் ஆயிடுது. இதுல ஹஸ்பண்ட் வேற, நீ இப்போலாம் என்னைக் கவனிக்கறதே இல்லைன்னு புலம்பல். மத்ததெல்லாம் டைஜெஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா, இவரோட புலம்பலைத்தான் டைஜெஸ்ட் பண்ணிக்கவே முடியறதில்லை. நடு ராத்திரியில அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வரப்போ எங்கருந்துடீ ரொமான்ஸ் மூட் வரும்?’

புருவம் சுளித்து கோபம் தலைக்கேற தனுஜா கேட்கையில், அனுஜாவுக்கும் கூட, ‘அட... ஆமாமில்லை, இவ கேட்கறது நியாயம் தானே?’ என்று தானிருந்தது.

இவர்கள் இப்படி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்களைக் கடந்து சென்று அலுவலக அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆஃபீஸ் அட்டண்டர் தங்கலட்சுமியின் பாம்புச் செவியில் எல்லாம் உள்ளது உள்ளபடி பதிவாக... 

‘இன்னா மேம், இதுக்குப் போய் இத்தனை அலுத்துக்கற!’
- என்றவாறு இருவர் ஜமாவில் மூன்றாம் தேவியாக அழைப்பின்றி இணைந்தாள்.

தங்கலட்சுமியை அனுஜாவும், தனுஜாவும் வேற்றாளாகவோ, அட்டண்டர் தானே என்று மட்டமாகவோ கருதுவதில்லை என்பதால்... அவளது குறுக்கிடலை அவர்கள் கெளரவக் குறைச்சலாக எடுத்துக் கொள்ளாமல் தங்கள் பேச்சில் இணைத்து ஆதங்க உரையாடலை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தனர்.

‘தங்சு... கேட்டுட்டுத் தான இருந்த, அவ்ளோ தான் எங்களால முடியுது. ராத்திரி தூங்கலன்னா ஆஃபீஸ்ல தூங்கி வழிய வேண்டியது தான்.’ 
- என்று நொடித்துக் கொண்டாள் அனுஜா.

தனுஜா ஒன்றும் பேசவில்லை... அவள் இன்னும் புளிய மரத்தில் இருந்து இறங்க விரும்பாத வேதாளமாக சுளித்த புருவத்துடன் முகத்தில் சோபையின்றி அப்படியே நீடித்தாள்.

பக்கத்தில் வந்த தங்சு என்ற தங்கலட்சுமிக்கு 50 வயதிருக்கலாம்.

மெல்ல அருகே வந்து தனுஜாவின் முகவாய் பற்றி, தன்னை நோக்கித் திருப்பி,

‘இன்னா மேம், உம் புருஷன் ரொமான்ஸ் பண்ண உன்னைக் கூப்பிடாம வேற யாரைக் கூப்பிடுவார்? அதுக்கா இம்புட்டு கோவம்? என்று ஆறுதலாக வினவ;

பிரச்னை ரொமான்ஸ் பண்றதுல இல்ல தங்சு, அதுக்கான மூட் கிரியேட் ஆக மாட்டேங்குது... அதான் இப்போ பிரச்னை.

அட இன்னா மேம்? ரெண்டு பேரும் மெத்தப் படிச்சும், இதுக்கெல்லாமா நேரம், காலம் பார்ப்பீங்க? எனக்கொன்னும் புரியல. தங்சு, முகவாயைத் தோள்பட்டையில் இடித்துச் சிரித்துக் கொண்டே இதைச் சொல்ல;

அவளது கேள்வியில் நிதானமடைந்து, அவளை நோக்கி பரிதாபமாகத் திரும்பிய தனுஜா;

‘டயர்டா இருக்கு தங்சு. பிள்ளைங்களையும் சமாளிக்கனும், வீட்டு வேலைகளையும் முடிக்கனும், சாப்பாடு, ஹவுஸ் கீப்பிங்னு மறுநாளைக்கும் தயார் பண்ணனும். நடுவுல என் வேலையில புரமோஷன் ஆகனும்னா நானும் நிறைய படிச்சிட்டே இருக்கனும். அதுக்கான வொர்க்‌ஷாப்ஸ் போகனும், இதுல ரெண்டு குழந்தைங்க பிறந்து அவங்க வளர, வளர இண்ட்ரெஸ்ட் எல்லாம் ஃபியூச்சர் ப்ளான்ஸ் மேல தான் இருக்கே தவிர சத்தியமா ரொமாண்டிக்கா எதையுமே யோசிக்க முடியல. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் எப்பவுமே ஒரு கை தட்டினா ஓசை எழும்பாது தெரிஞ்சுக்கோ. ரெண்டு பேருக்குமே சேர்ந்தாப்ல தோணனும். யாராச்சும் ஒருத்தருக்கு மட்டும் தோணினா, அது ரொமான்ஸ் இல்ல நியூஸன்ஸ்.

- என்றாள் சோர்வாக. விரக்தியாக.

அப்போது அனுஜா, இரு உன் பிரச்னைக்கான தீர்வையும் கூகுளாண்டவர் கிட்டயே கேட்டுடலாமே என்று விட் அடிக்க, அவளைப் பார்த்து தனு முறைக்க, 
தங்கம்மா, 
‘இதுக்கும் இந்தப் பொட்டி பதில் சொல்லுமா?’ 
- என்று கணினித் திரையை உற்றுப் பார்க்க.. தனு திரையில் ஒளிர்ந்த இணையப்பக்கத்தை ப்ரிண்ட் எடுத்து மூவருக்கும் பொதுவாக வாசித்துக் காட்டத் தொடங்கினாள்;

அதில் சொல்லப்பட்ட டிப்ஸ் கீழே;

  1. காதலில் கசிந்துருகி கணவரைப் பற்றி எதையாவது எழுதி அவருக்கே தெரியாமல் அவரது பர்ஸில் அதை ஒளித்து வையுங்கள், திடீரென அது அவரது கண்களில் படும்போது தானாய் மடல் விரிக்கும் ரொமாண்டிக் மூட்.
  2. எந்தக் காரணமும் இல்லாமல் ‘லவ் யூ லாட், மிஸ் யூ லாட்’ மெசேஜ் அனுப்புங்கள் உங்கள் கணவருக்கு.
  3. அன்றைய இரவு ஆரோக்யமாகக் கழிய முன்னேற்பாடாக காதல் சொட்டச் சொட்ட எதையாவது பிதற்றி வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.
  4. கணவரோ, மனைவியோ ஒருவர் பேசும் போது மற்றவர் குறுக்கிட்டு கடுப்படிக்காமல் உறவை மேம்படுத்தத் தக்க விதத்தில் ஒருவர் பேசும் போது மற்றவர் அமைதி காக்கலாம்.
  5. அவருக்கு/அவளுக்குப் பிடித்த இரவு உணவை சமைக்கவும்.
  6. அவருக்கு/அவளுக்குப் பிடித்த உடைகள் சுத்தமாகவும், அணியத் தயாராகவும் இருப்பதை விளம்பரங்களில் காட்டுவதைப் போல ரொமாண்டிக்காகவும் சூசகமாகவும் வெளிப்படுத்தலாம். 
  7. அவரது /அவளது வேலையில் ஆர்வம் காட்டுங்கள்.
  8. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகளையோ எதுவானாலும் சரி முழுதாக என் ஜாய் செய்து அவருடன்/அவளுடன் பாருங்கள்.
  9. கணவரோ அல்லது மனைவியோ இருவருமே கண்டிப்பாக மென்மையான மனம் மயக்கத்தில் ஆழ்த்தும் விதமான பெர்ஃபியூம்களைப் பயன்படுத்துங்கள்
  10. கணவர் / மனைவி இருவரில் யார் ஜோக் அடித்தாலும் இருவருமே விழுந்து விழுந்து சிரியுங்கள்.
  11. நாளுக்கு நாள் அழகு கூடிக் கொண்டிருப்பதாக இருவருமே ஒருவருக்கொருவர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவருக்கொருவர் மெச்சிக் கொள்ள மறக்காதீர்கள்.
  12. இருவருமாக இணைந்து நல்ல மூட் கிரியேஷனுக்கு அவரவருக்குப் பிடித்த பாடல்களுடனான அந்தாக்ஸரி நிகழ்த்தலாம்.
  13. குழந்தைகள் முன் கணவன், மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுங்கள்.
  14. அவரது அவளது நண்பர்கள் முன் அவரை/அவளை புகழ்ந்து பேசுங்கள்.
  15. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியேறும் போதும் அவரை/அவளை மென்மையாக நெற்றியிலோ அல்லது புறங்கையிலோ/ உள்ளங்கையிலோ முத்தமிடத் தவறவேண்டாம்.
  16. இரவு உணவை முடிக்கையில் நகைச்சுவை நிறைந்திருக்கட்டும்.
  17. இரவு உடைகள் அழகானதாக மட்டுமல்ல மென்மையானதாகவும் தேர்ந்தெடுத்து அணிய மறக்க வேண்டாம்.
  18. கணவர் / மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் ஏதேனும் வாக்குறுதி அளித்துக் கொண்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றப் பழகுங்கள்.
  19. படுக்கையில் தாம்பத்யத்தின் நித்தியமான பூரணத்துவம் கிட்ட அதை மென்மையான மசாஜில் இருந்து தொடங்கலாம்.
  20. குழந்தைகள் முன் அவரை / அவளை மரியாதையை எப்போதும் காப்பாற்றத் தவற வேண்டாம்.
  21. அருமையான தாம்பத்யத்தை உணரும் ஒவ்வொரு முறையும் மறுநாள் பகலில் சுகமான நினைவுகள் நீடிக்கும் போதெல்லாம் ‘மீண்டும் எப்போது?!’ என்ற ஒற்றைவரிச் செய்தியை கணவரும், மனைவியும் ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொள்ளத் தவற வேண்டாம்.
  22. கணவர் /மனைவி வீட்டுக்குள் நுழையும் போது யார் முதலில் வீட்டுக்குள் இருக்கிறார்களோ அவர்கள் வீடு முழுவதையும் சுத்தம் மற்றும் நறுமணத்தால் நிறைக்கத் தவற வேண்டாம்.
  23. படுக்கையறையில் ஒரு அழகான வாசனை மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். குறைந்த பட்சம் மென்மையான இரவு விளக்கின் ஒளி நிறைந்திருக்கச் செய்யலாம்.
  24. அவருக்கு / அவளுக்குப் பிடித்த சிற்றுண்டி அல்லது பானத்தில் இருந்து துவங்கலாம்.
  25. அவர் / அவள் வீட்டுக்குள் நுழையும் போது மற்றவர் முகத்தில் மென்னகையை மலரச் செய்ய மறக்காதீர்கள்.
  26. அவர் / அவள் உங்களை எவ்வளவு பெருமைப்படுத்துகிறார் என்று அவரிடம் /அவளிடம் அடிக்கடி சொல்லுங்கள்.
  27. இருவரும் இணைந்திருக்கும் போது குறைந்தபட்சம் அடிக்கடி ஒருவர் மற்றவரது கைகளைப் பற்றிக் கொள்ள மறக்காதீர்கள்.
  28. கணவரது மடியில் குழந்தைகள் தான் மடியில் அமர வேண்டும் என்பதில்லை, மனைவியும் அமரலாம். அதே போல மனைவி, கணவரைத் தன் மடியில் தலை வைத்துப் படுக்க அனுமதிக்கலாம்.
  29. அவனும் / அவளும் நண்பர்களுடன் இணைந்து ஏதாவது புது முயற்சிகளை மேற்கொண்டால் ஒருவருக்கொருவர் முகம் காட்டாமல் இருவருமே ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கலாம்.
  30. கணவர் . மனைவிக்கு மட்டுமே அர்த்தமாகும் படியான கண் சிமிட்டல்கள், தோள் குலுக்கல்கள் போன்ற சங்கேத பாஷைகள் அத்திப் பூத்தாற் போல் வெளிப்பட்டு உறவை பலப்படுத்தட்டும்
  31. ஒருவரது அழைப்புக்கு மற்றொருவர் எப்போதும் ‘சரி’ என்றே சொல்லிப் பழகுங்கள்.
  32. கணவன், மனைவிக்குள் என்றென்றைக்குமாக ‘நோ’ என்ற வார்த்தைக்கு அவசியமில்லாது போகச் செய்யுங்கள்.
  33. கட்டக் கடைசியாக ஒரு வார்த்தை, நேரம், காலம், மீனம், மேஷம் பார்க்கத் தேவையற்ற ஒரே உறவு தாம்பத்யம் ஒன்றே! டோண்ட் ஃபர்கெட் இட்!

கூகுளாண்டவரின் கடைசி பாயிண்டை வாசித்து முடிக்கையில் தங்கம்மா அவசர, அவசரமாகக் குறுக்கிட்டாள்.

இன்னா கண்ணு, இம்மாம் பெருசா, வழ வழ, கொழ, கொழான்னு சொல்லிக்கினே போற, அதான் கடைசியா நாஞ்சொன்ன பாயிண்ட்டுக்கே வந்துட்டியே!

அட இன்னா மேம்? ரெண்டு பேரும் மெத்தப் படிச்சும், இதுக்கெல்லாமா நேரம், காலம் பார்ப்பீங்க? எனக்கொன்னும் புரியல. 

என்று தங்சு, மீண்டும் முகவாய்க் கட்டையில் தோள்பட்டையில் இடித்துச் சிரிக்கவே..

இப்போது மூவருக்குள்ளும் தங்களையறியாமல் சிரிப்பு மூண்டது.. தங்ஸின் கைகளைப் பற்றிக் கொண்டு வெடித்துச் சிரித்தவர்கள்...

சரி... சரி விடும்மே, இது கூகுளாண்டவர் டிப்ஸ் இல்ல, நம்ம தங்ஸு சொன்ன டிப்ஸ்ன்னு மொத்த கிரெடிட்டும் உனக்கே கொடுத்துடலாம். அம்புட்டுத்தானே!

என்று ரிலாக்ஸாகி அவரவர் வேலைகளில் இரண்டறக் கலந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com