புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

குங்குமம் வைத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மனதில் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைந்து ஆரோக்யமான எண்ணங்கள் மேம்படும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளே!
புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

இந்து மத நம்பிக்கைகளின் படி நெற்றி நடுவில் வட்டத் திலகமிட்டுக் கொள்வது பெண்களின் பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

தவிரவும் அந்தக் காலத்தில் ஆண்களும் கூட இங்கு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டிருந்த பழக்கமும் இருந்திருக்கிறது. அப்போது வட்டத் திலகம் பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றி நடுவில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புருவ மத்தியில் இட்டுக் கொள்வது வழக்கமாயிருந்திருக்கிறது. அவை பெரும்பாலும் குலச்சின்னங்களாக இருந்திருக்கின்றன. நான் குறிப்பிடுவது புராதன இந்தியப்பழங்குடிகள் காலத்தில் இருந்த பழக்கத்தை. அதன் பிறகு வேத கால மன்னர் பரம்பரைகள் வரத் தொடங்கிய பின் சூரிய, சந்திர, லச்சினைகளை நெற்றி நடுவில் வைத்துக் கொள்ளத் தொடங்கினர். இப்படித் திலகமிடுவதற்கென்றே அரண்மனைகளில் அக்கலையில் தேர்ந்த சூதர்கள் என்று சொல்லப்படக்கூடிய பணியாளர்களை அப்போது அரசர்கள் வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

அதெல்லாம் பழங்கதை...

இன்று நெற்றி நடுவில் பொட்டிட்டுக் கொள்வது ஏன் என்ற கேள்வியை இன்றைய இளம் தலைமுறையினரிடம் முன் வைத்தால், அவர்களுக்கு அதற்கான அர்த்தம் தெரிந்திருக்குமா? என்றால் பதில் சந்தேகத்திற்குரியதே.

இந்து மத நம்பிக்கைகளின் படி, புருவ மத்தி என்பது ஆக்னேய சக்கரம் இருக்குமிடம். அந்த ஆக்னேய சக்கரம் என்பது நமது உடலில் உள்ள 7 சக்தி மையங்களில் ஒன்று. 

ஏழு சக்கரங்களில் முதலாவது சக்கரம் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உள்ளது. இதற்கு மூலாதாரம் என்று பெயர். மூலாதார சக்கரத்திற்கு சற்று மேலே தொப்புளுக்கு சற்று கீழே இரண்டாவது சக்கரம் அமைந்துள்ளது அதற்கு ஸ்வாதிஷ்தானம் என்று பெயர். தொப்புள் பகுதியில் மூன்றாவது சக்கரம் அமைந்துள்ளது. அதற்கு மணிப்பூரகம் என்று பெயர். அடுத்து இருதயப்பகுதியில் நான்காவது சக்கரம் அமைந்துள்ளது இதற்கு அனகதம் என்று பெயர். கழுத்துப்பகுதியில் ஐந்தாவது சக்கரம் அமைந்துள்ளது இதற்கு விசுத்தி என்று பெயர். புருவ மத்தியில் ஆறாவது சக்கரம் உள்ளது. அதற்கு ஆக்னேயம் என்று பெயர். அடுத்து தலை உச்சியில் ஏழாவது சக்கரம் உள்ளது, அதற்கு சஹஸ்ரரம் என்று பெயர்.

இந்த ஏழு சக்கரங்களிலும் தெய்வசக்திகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படிஇந்த 7 ஐயும் தட்டி எழுப்பினால் குண்டலினி சக்தி வலுப்பெறும் என்பது குண்டலினி யோக முறையின் நம்பிக்கை. 
அது மட்டுமல்ல, புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொண்டால் பிறர் நம்மை வசியம் செய்வது கடினம் என்றொரு நம்பிக்கையும் இந்துக்களிடையே நிலவுகிறது.

பொதுவாக திருமணமான பெண்கள் நெற்றியில் மட்டுமல்ல நெற்றி வகிட்டிலும் சிந்தூரம் இட்டுக் கொள்வது வட இந்தியப்பழக்கம். தென்னிந்தியாவிலும் சுமங்கலிகள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்கிறார்கள். இது அவர்களை இளம்பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு ஆண்களின் பிறழ் பார்வையில் இருந்து தப்புவதற்கும் உதவுவதாகப் பெண்கள் நம்புகின்றனர். விதவைகள் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது எனும் நம்பிக்கையை உடைத்து தற்போது சிறு திலகம் அல்லது கருப்புச் சாந்திட்டுக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பாழ் நெற்றி என்பது இந்துக்களிடையே ஆரோக்யமான விஷயமாகக் கருதப்படவில்லை. 

குங்குமம், சந்தனம், திருநீறு, நாமக்கட்டியால் இடப்படும் கோபி வடிவ திலகம் இப்படி ஏதேனும் ஒன்று ஆண்கள் மற்றும் பெண்களின் நெற்றியில் இடம்பெற வேண்டும் என்பதும், அவை மங்கலச் சின்னங்களாகக் கருதப்படும் என்ற நம்பிக்கையும் இந்துக்களிடையே நிலவுகிறது.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, புருவ மத்தி என்பது நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம். அதனால் தான் யோகக்கலை இதனை ஆக்னேயச் சக்கரம் என்கிறது. இந்தச் சக்கரத்தின் இயல்பு எலக்ட்ரோ மேக்னடிக் எனப்படும் மின்காந்த அலைகளை புருவ மத்தி மற்றும் நெற்றிப் பொட்டில் வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதால் இங்கு பொட்டி இட்டுக் கொள்வதின் மூலம் சக்தி விரயமாவதைத் தடுக்கலாம் என்கிறது யோகக்கலை.

அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, இந்தப் பகுதியானது சூடாகித் தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விப்பதோடு நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதையும் தடுக்கிறது.

விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால்;

புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்வதால்;

மனம் நிர்மலமாகி அமைதி பெறுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகளில் ஒன்று.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

குங்குமம் வைத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சி அடைவதோடு மனதில் எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைந்து ஆரோக்யமான எண்ணங்கள் மேம்படும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com