பெங்களூரு பயணியின் மனதைக் குளிர வைத்த ஓலா ஓட்டுநரின் நற்செய்கை!

ஓலா, உபேர் போன்ற வாகன ஓட்டுநர்களின் பெயர்கள் பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்களுக்காகத் தான் இதுவரையிலும் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தன. அகஸ்மாத்தாக எப்போதேனும் இம்மாதிரியான நல்ல காரியங்களுக்காகவு
பெங்களூரு பயணியின் மனதைக் குளிர வைத்த ஓலா ஓட்டுநரின் நற்செய்கை!

பெங்களூரைச் சேர்ந்த ஓலா ஓட்டுநர் கதீப் ரஹ்மான். இவரது நல்லெண்ணத்தைப் பற்றித் தான் இன்று ஊர் முழுக்கப் பேச்சு. அப்படி என்ன செய்து விட்டார் இந்த ஓட்டுநர் என்கிறீர்களா? ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க் காசு கீழே கிடந்தால் கூட அதை அனாமதேயமாகக் கண்டெடுத்தால் உடனே அதைச் சொந்தமாக்கிக் கொள்ளத் துடிக்கும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகில் தனது வாகனத்தில்.. பயணி ஒருவர் மறந்து விட்டுச் சென்ற சுமார் 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் உபகரணங்களை மீண்டும் தேடிச் சென்று அவரிடமே ஒப்படைத்திருக்கிறார் கதீப்.

இதோ அந்தப் பயணியே தனக்கு நேர்ந்ததை விவரிக்கிறார் பாருங்கள்...

‘என் உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று விட்டு அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூரு திரும்பிய நான், கே ஆர் புரம் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல ஓலா கார் அமர்த்திக் கொண்டேன். வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் கார் பஞ்சர் ஆகி விட்டது.  கார் டயரை மாற்ற வேண்டியிருந்ததால்  ஓட்டுநர் கதீர் ரஹ்மான், கார் தயாராக சற்று தாமதமாகலாம், நீங்கள் வேறு வாகனம் ஒன்றை அமர்த்திக் கொண்டு வீடு திரும்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவர் சொன்னபடியே, நானும் 10 நிமிடங்களில் வேறொரு வாகனத்தை அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்த 10 நிமிடத்தில் எனக்கு கதீப்பிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.  நான் எனது மடிக்கணினி மற்றும் சில விலையுயர்ந்த எலெட்ரானிக் உபகரணங்களை வைத்திருந்த கைப்பையை அவரது காரிலேயே விட்டு வந்து விட்டதாகவும், திரும்ப வந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். என் கைப்பை கிடைத்து விட்ட போதும், அதிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை தொலைக்கவிருந்த நிலையை எண்ணிக் கொஞ்டம் பதட்டமாகி விட்டேன் நான். அப்போதும், கதீப் என்னிடம் பதற்றமின்று வாருங்கள், நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று என்னைச் சமாதானப்படுத்தி நான் அவரைச் சென்று அடைவதற்குள்ளாகப் பாதி வழியிலேயே என் கைப்பையை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டார். 

இந்த உபகாரத்துக்கு நன்றி செலுத்தும் விதமாக நான் அவருக்கு பணம் கொடுத்தேன். ஆனால், அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், என்னால் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால், வற்புறுத்தி சிறுது பணத்தை அவருடைய பாக்கெட்டில் திணித்து விட்டு வந்தேன். அதிகாலையில் நேர்ந்த இந்த சம்பவம் என் மனதை நெகிழ்த்துவதாக அமைந்து விட்டது. 

எனவே, என்னிடம் மிக மிக நேர்மையாக நடந்து கொண்டவரான ஓலா ஓட்டுநர் கதீப் ரஹ்மானை நீங்களும் பாராட்டுங்கள்;

- என்று கூறி பயணி சயூஜ் ரவீந்திரன் தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அவர் பகிர்ந்தது தான் தாமதம், அந்தப் பதிவு தற்போது 10,000 லைக்குகள், 2,600 பகிர்வுகள் என வைரலாகி விட்டது.

அது மட்டுமல்ல,  பெங்களூரைச் சேர்ந்த எஸ் ஜி பி க்ரூப் நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஓலா ஓட்டுநரின் நற்செய்கையையும் நேர்மையையும் பாராட்டும் விதமாக அவருக்கு ரூ 25,000 க்கான காசோலைப் பரிசையும் அனுப்பி வைத்திருக்கிறது.

வாஸ்தவத்தில், தென்மாநிலங்களில் பெருவாரியாக இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓலா, உபேர் போன்ற வாகன ஓட்டுநர்களின் பெயர்கள் பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்களுக்காகத் தான் இதுவரையிலும் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தன. அகஸ்மாத்தாக எப்போதேனும் இம்மாதிரியான நல்ல காரியங்களுக்காகவும் பேசப்படுவதும், பாராட்டப்படுவதும் வரவேற்கத் தக்கது.

அத்துடன் இச்சம்பவம் மூலமாக, ஒரு மனிதன் தனது நல்ல செய்கைக்காக எந்த அளவுக்கு இந்த சமூகத்தில் மதிக்கப்படுகிறான், துதிக்கப்படுகிறான் என்பதும் தற்போது புலனாகி இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com