நுங்கு, கொய்யா, பனங்கிழங்கு சாப்பிட குழந்தைகளைப் பழக்க எளிமையான டிப்ஸ்!

கொய்யாப்பழம், நுங்கு, நாட்டு மக்காச்சோளம், மலை நெல்லிக்காய், சீத்தாப்பழம், பனங்கிழங்கு, தர்பூசணி என சத்து நிறைந்த அருமையான கனி வகைகளும், கிழங்களும் நம்மைச் சுற்றி கையெட்டும் தூரத்தில் விலை மலிவாக
பனங்கிழங்கு
பனங்கிழங்கு

கொய்யாப்பழம், நுங்கு, நாட்டு மக்காச்சோளம், மலை நெல்லிக்காய், சீத்தாப்பழம், பனங்கிழங்கு, தர்பூசணி என சத்து நிறைந்த அருமையான கனி வகைகளும், கிழங்களும் நம்மைச் சுற்றி கையெட்டும் தூரத்தில் விலை மலிவாக கிடைத்தாலும் பெரியவர்களான நமக்கே அவற்றையெல்லாம் வீட்டுக்கு வாங்கிச் செல்லத் தோன்றுவதில்லை. ஏனென்றால், குழந்தைகளுக்கு அவையெல்லாம் பிடிக்காது. அவர்களுக்கு பீட்ஸா, பர்கர், சாக்லெட், செயற்கை குளிர்பானங்கள், ஆப்பிள், ஆரஞ்சு, பாக்கெட்டில் அடைத்த ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமே பிடிக்கும் என்று அழுத்தமாக நம்பிக் கொண்டு அதையே தொடர்ந்து அவர்களுக்கு வாங்கித் தந்து கொண்டிருக்கிறோம். இந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நாம் முயல வேண்டிய நேரமிது. 

நுங்கு
நுங்கு

ஏனெனில், இன்று கேன்சர், நீரழிவு நோய், குடல் தொடர்பான பல்வேறு நோய்கள் மற்றும் இன்னும் ஏராளமான ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு நமது உணவுப் பழக்கமும் முக்கியமான காரணமாகிறது என்று உணவியல் வல்லுனர்களின்  ஆய்வுக்கட்டுரைகள் பல்லாண்டுகளாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. அதை நாம் எச்சூழலிலும் மறந்து விடக்கூடாது. எனவே பிரதான உணவானாலும் சரி, சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் என்றாலும் சரி அவற்றில் வெறும் சுவைக்கு மட்டுமே இடம் கொடாமல் நமது உடல் நலனுக்குத் தேவையான விஷயங்கள் அதில் என்னென்ன இருக்கின்றன என்பதையும் இனிமேல் யோசித்தே உண்பது என முடிவெடுக்க வேண்டும்.

கொய்யா
கொய்யா

முன்பாவது சில இடங்களில் சில பொருட்கள் கிடைக்காது என்ற நிலை இருந்தது. உதாரணத்திற்கு கிராமங்களில் சிறிய நெல்லிக்காய்கள் கிடைக்கும் அளவுக்கு மலை நெல்லி கிடைப்பதில்லை. நுங்கும், பனங்கிழங்கும் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே உரித்தான வறண்ட உணவுகள். தர்பூசணி சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றிருந்த நிலை இன்று மாறி விட்டது. இன்று மேற்கண்ட அனைத்து கனிகள் மற்றும் கிழங்கு வகைகளும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் எல்லா சீசன்களிலுமே கிடைத்து வருகின்றன.

மலை நெல்லிக்காய்
மலை நெல்லிக்காய்

பெற்றோர்களான நமது கடமை, வாரத்திற்கு இரண்டு நாட்களோ அலது மூன்று நாட்களோ இந்தப் பழங்களையும், கிழங்குகளையும் வீட்டிற்கு வாங்கிச் சென்று முதலில் குழந்தைகள் எதிரில் அவர்கள் பார்க்க நாம் உண்பதே! பெற்றோர்களின் பழக்க வழக்கங்களைக் கண்டு குழந்தைகளும் ஒருநாள் அவற்றை ருசி பார்க்கத் தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு அப்படியான எண்ணத்தை உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. பிறகு அவர்களே சிறிது, சிறிதாக இந்த வகை உள்நாட்டு பழங்கள் மற்றும் கிழங்குகளை சிற்றுண்டிகளாக சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். பிறகு இந்தப் பழக்கம் அவர்கள் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் அவர்களது நண்பர்களுக்கும் பரவத் தொடங்கி விடும்.

சத்தான உணவுகளைச் சாப்பிடப் பழக்கும் போது சில சமயங்களில் குழந்தைகளுக்கு அவற்றின் சுவை பிடிக்காமலும் போகலாம்.  அப்போது அதை எப்படிச் சமாளிப்பது என்றால், ஒவ்வொரு உணவின் பின்னும் ஒரு சுவையான கதையையும், அது தொடர்பான ஒரு நெருக்கமான பின்னணியையும் குழந்தைகள் மனதில் பெற்றோர் உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைக்கு பனங்கிழங்கு சாப்பிடப் பழக்க வேண்டும் என்றால், நீங்கள் குழந்தைப் பருவத்தில் உங்கள் நண்பர்களுடன் உங்கள் ஊரின் தெருமுக்கு பெட்டிக்கடைகளிலும், பள்ளி வாசலில் கூடையில் கிழங்கு விற்பவர்களிடமும் எப்படியெல்லாம் இந்தக் கிழங்குகளை வாங்கி சுடச்சுட உரித்து சாப்பிட்டுக் கொண்டே நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டீர்கள்.. என அன்றைய நாட்களின் சுவாரஸ்யமான நிமிடங்களை குழந்தைகளின் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். இப்படிச் செய்வதால் குழந்தைகளுக்கு அந்தப் பண்டங்களின் மீதான ஈடுபாடு என்பது சம்பவங்களுடன் தொடர்புடையதாக பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விடும். பிறகு பனங்கிழங்கைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு மட்டுமல்லாது தனது நண்பர்களுக்குமாகச் சேர்த்து அவற்றை வாங்கித் தந்து தமது பெற்றோர்களைப் போலவே அரட்டையடித்துக் கொண்டு சாப்பிட வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அவர்களுக்கும் வரத்தொடங்கி விடும்.

அதேபோல மலை நெல்லியைப் பழக்க வேண்டுமென்றால் அவ்வையாருக்கு அதியமான் கொடுத்த அருங்கனி இது தான் என்று அதன் உதாரணக்கதையைச் சொல்லி சாப்பிடப் பழக்கலாம்.

நுங்கு பிடிக்காதவர்கள் அரிது. ஆயினும் சிலர் காரணமின்றி அதை வெறுப்பதுண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நுங்கின் சிறப்பை கூடுமான வரை எடுத்துக்கூறி சாப்பிடத்தரலாம். இல்லையேல் நுங்கை சர்பத் மாதிரியான பானமாக மாற்றியும் சாப்பிடப் பழக்கலாம்.

நாம் குழந்தைகளை சத்தான உணவுகளுக்கும், சிற்றுண்டிகளுக்கும் பழக்க வேண்டியது இந்த முறையில் தானே தவிர, வற்புறுத்தி, தொல்லை செய்து, ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறோம் பேர்வழியென்று அவர்களுடன் உளவியல் ரீதியாகப் போராடி அல்ல.  அப்படி முயற்சிக்கும் போது தான் குழந்தைகளுக்கு வெறுப்பாகி அந்த வெறுப்பு அந்த உணவுப் பொருட்களின் மீதான அசூயையாக மாறி விடுகிறது.

எனவே இனிமேல் இப்படி முயற்சித்துப் பாருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com