Enable Javscript for better performance
police rescue choking baby- Dinamani

சுடச்சுட

  

  கடந்தது மரணபீதி, இப்போ பாப்பா ஹேப்பி, அம்மா ஹேப்பி, காப்பாற்றிய போலீஸ் அங்கிளும் ஹேப்பியோ ஹேப்பி

  By RKV  |   Published on : 11th June 2019 06:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pappu_happy

   

  அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் பாம் பீச் கார்டன், ஃபுட் கோர்ட் ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் நம் அனைவரையுமே ஒரு நொடி மூச்சடக்கி அதிர்ச்சியில் ஆழ்த்தி பின் நிதானமாக சுவாசிக்கச் செய்யும் அளவுக்கு த்ரில்லானது. அங்கிருக்கும் ஃபுட் கோர்ட் ஒன்றில் தன் குழந்தைக்கு சிக்கன் நக்கெட்ஸ் வாங்கி உண்ண வைத்தார் ஒரு இளம் அம்மா. இரண்டு குழந்தைகளில் மூத்த குழந்தைக்கு ஆறேழு வயதிருக்கலாம். இளையவளான குட்டிப் பெண்ணுக்கு 18 மாதங்கள் தான் நிறைவடைந்திருந்தது. ஒன்றரை வயது குட்டிப்பாப்பா. அம்மா வாங்கித் தந்த சிக்கென் நக்கெட்ஸை அண்ணனுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாப்பாவுக்கு அது தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அம்மா முதலில் இதைக் கவனித்திருக்கவில்லை. அவர், கவனிக்கத் தொடங்கும் போது பாப்பாவுக்குள் ஏதோ வித்யாசமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. சடுதியில் மூச்சடைத்து பாப்பாவின் உடல் விறைத்துப் போனது. நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இதை உணர்ந்து கொண்ட அம்மா திடுக்கிட்டுப் போய் குழந்தையை சரியாக்க என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை. திகைத்துப் போய் பித்துப் பிடித்து நின்று கொண்டிருந்த அம்மாவைச் சூழ்ந்து கொண்டனர் அந்த ஃபுட் கோர்ட்டில் இருந்த மக்கள். சிலருக்கு அந்தக் குழந்தை படும் துயரத்தைப் பார்க்க மனதில் தெம்பில்லையென்று மிரண்டு ஒதுங்கிச் சென்றனர். ஆனால், குழந்தையின் அம்மா மட்டும் பயத்துடனும், பரிதவிப்புடனும் குழந்தையை எப்படியாவது இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்ய தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார்.  எத்தனை முயன்ற போதும் அவரால் முடியவே இல்லை. துவண்டு நின்ற நொடியில் அந்த ஃபுட் கோர்ட்டில் அப்போது டியூட்டியில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள்.

  இருவரும் குழந்தையின் நிலை கண்டு அதிர்ச்சியடையாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட முதலுதவிப் பயிற்சிகளை ஒவ்வொன்றாக முயன்று பார்த்தார்கள். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதால் செயலிழந்திருப்பது தெரியவந்தது, எனவே குழந்தையின் உடலுக்குள் இருக்கும் சுவாசப் பாதைகளை லகுவாக்கும் முயற்சிகளைச் செய்தார் ஒரு போலீஸ்காரர். ஆனாலும், குழந்தையிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது குழந்தை மூச்சடக்கி ஒரு நிமிடம் முழுதாக முடிந்து விட்டதால் அதன் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியிருந்தது. அரண்டு போன அம்மா அருகிலிருந்த பெண்மணியைக் கட்டியணைத்து கதறியழத் தொடங்கி விட்டார். சுற்றிலும் இத்தனை பதட்டமான சூழல் நிலவிய போதும் குழந்தைக்கு முதலுதவி அளித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் சற்றும் மனம் தளரவில்லை. தொடர்ந்து குழந்தையின் சுவாசப் பாதையை சீராக்க தான் அறிந்த எல்லா வழிகளிலும் முயன்று கொண்டே இருந்தார். அழுது தவித்த அம்மா இப்போது கல்லாய்ச் சமைந்து குழந்தைக்கு நடக்கும் முதலுதவியை திக்பிரமை பிடித்து நோக்கத் தொடங்கினார். ஏதாவது மாயம் நிகழாதா? குழந்தை மீண்டும் கையைக் காலை அசைத்து தனது இருப்பை உணர்த்தாதா? என்ற ஏக்கம் அந்த தாயின் விழிகளில் பரிதவித்துக் கொண்டிருந்தது. 

  எந்த நொடியில் என்று நினைவில்லை.

  இப்போது நினைத்தாலும் மீண்டும் அது எந்த நொடியில் நிகழ்ந்தது என்று சுத்தமாக நினைவில்லை தான்.

  திடுக்கென ஏதோ ஒரு நொடியில் குழந்தையின் சுவாசப் பாதையில் சிக்கியிருந்த சிக்கன் துணுக்கு அகன்று வழிவிட குழந்தையிடம் அசைவு தெரிந்தது.

  நம்பத்தான் முடியவில்லை.

  மரணத்தை தொட்டு மீண்ட தனது குழந்தையை ஓடிப் போய் வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார் அம்மா.

  தக்க நேரத்தில் உதவிய போலீஸ்காரர்களுக்கு நன்றி சொன்னால், அவர்கள் அதைச் சாதாரணம் போல எடுத்துக் கொண்டார்கள். இது எங்கள் கடமை. இதில் நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. அந்த நேரத்தில், அந்த இடத்தில் நாங்கள் இருந்தது மட்டுமே தெய்வச் செயல்! என்று பண்புடன் முடித்துக் கொண்டனர்.

  இம்மாதிரியான சம்பவங்கள் எல்லோர் வாழ்விலும் ஏதோவொரு சந்தர்பத்தில் நிகழ்வது தான். அப்போது தப்பி விட்டால் அது தெய்வச் செயல் இல்லாமல் வேறென்ன?!

  இந்தச் சம்பவத்தில் அந்த போலீஸ்காரர்களின் சமயோஜித குணம் தான் பெரிதாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாராட்டுகிறோமோ இல்லையோ நிச்சயம் நம் வாழ்விலும் நாம் பின்பற்றியாக வேண்டிய அருங்குணங்களில் ஒன்று அது. ஆபத்து நெருங்கும் தருணத்தில் அதிலிருந்து மீள பதட்டம் நமக்கு உதவாது. நிதானமும், தெளிவான தொடர் முயற்சிகளும் தான் கைகொடுக்கும்.

  ஸோ. இப்போது நொடியில் கடந்தது மரணபீதி, இப்போ பாப்பா ஹேப்பி, அம்மா ஹேப்பி, காப்பாற்றிய போலீஸ் அங்கிளும் ஹேப்பியோ ஹேப்பி!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai