டோப் டெஸ்ட் குறித்து கோமதி மாரிமுத்து விளக்கம் (விடியோ)

தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே தெரியாது என்றும், ஏதேதோ பெயர்களை எல்லாம் குறிப்பிடுகிறார்கள், அந்தப் பெயர்களை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
டோப் டெஸ்ட் குறித்து கோமதி மாரிமுத்து விளக்கம் (விடியோ)

18 வது ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என்று கடந்த மாதம் திடீரென புகழேணியின் உச்சியில் ஏற்றப்பட்டார் தமிழகத்தைச் சார்ந்த கோமதி மாரிமுத்து. வெற்றிக்குப் பின் அவரளித்த நேர்காணல்களில் பந்தயத்தில் தான் கிழிந்த ஷூக்களைப் போட்டுக் கொண்டு ஓடியது அங்கிருந்த போட்டியாளர்கள் அத்தனை பேருக்கும் தெரியும் என்றும், அரசு உதவியின்றி தானே, தனது சொந்தப் பணத்தில் விமான டிக்கெட் எடுத்து கத்தார் சென்று போட்டியில் கலந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார். இதனால் சிறு சர்ச்சை ஏற்பட்டது. தேசபக்தர்கள் என தமக்குத் தாமே முத்திரை குத்திக் கொண்டவர்கள் கோமதியை, அரசு உதவியில்லாமல் தான் நீ ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை பெற்றாயா? நன்றி கெட்டத்தனமாகப் பேசாதே, என்றெல்லாம் அவரது நேர்காணல் விடியோக்களில் கமெண்டுகள் தூள் பறந்தன. 

அதன்பின்னான தமது நேர்காணல்களில் கோமதி, செண்டிமெண்ட் காரணமாகத்தான் தான் கிழிந்த ஷூக்களைப் போட்டுக் கொண்டு ஓடியதாக மாற்றிப் பேசினார். இது குறித்த சர்ச்சைகள் ஓயும் முன் கோமதி மாரிமுத்துவின் ஆசிய தடகள வெற்றி செல்லாது என்றும் அவர் போட்டியில் ஜெயிக்க ஊக்கமருந்து உட்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி விளையாட்டு ஆர்வலர்களையும், கோமதி ஆதரவாளர்களையும் அதிர்ச்சியில் தள்ளியது. ஒரு சாரர், கோமதி ஊக்கமருந்து உட்கொண்டிருப்பார் என்றும், பிற சாரர், அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் இணையத்தில் மோதிக்கொள்ள. இப்போது கோமதி தன்னிலை விளக்கம் அளித்து ஒரு விடியோ வெளிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பது;

தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே தெரியாது என்றும், ஏதேதோ பெயர்களை எல்லாம் குறிப்பிடுகிறார்கள், அந்தப் பெயர்களை எல்லாம் தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தற்போது டோப் டெஸ்டின் அடுத்த படியான பி சாம்பிள் டெஸ்டுக்காக சாம்பிள் அளிப்பதற்காக தான் கத்தார் வந்திருப்பதாகவும், இந்த சோதனையில் நிச்சயம் தான் வெற்றி பெற்று தன் மேல் குற்றமில்லை என்பதை நிரூபிக்கும் வரை தான் ஓயப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் தங்க மங்கையாக குறுகிய காலமே கொண்டாடப்பட்ட கோமதி மாரிமுத்துவின் வார்த்தைகள் உண்மையானால் ஒட்டுமொத்த தமிழகமும் மீண்டும் அவரைக் கொண்டாடும். பொறுத்திருந்து காணலாம். 

VIDEO COURTESY : INDIA GLITZ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com