லக்கி மேனுக்கு மெட்டல் டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கக் கட்டி!

சுமார் 1.4 கிலோகிராம் எடை கொண்ட இந்த தங்கக் கட்டியின் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு $99,000 AUD. யூரோப்பியன் டாலர் மதிப்பு $68,760. நம்மூர் ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக ரூ.48,00,000..
லக்கி மேனுக்கு மெட்டல் டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கக் கட்டி!
Published on
Updated on
2 min read

உலகம் முழுவதும் தங்கத்தை தேடும் மனிதர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அது ’மம்மி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தில் காட்டப்படுவதைப் போல புதையலாகவோ அல்லது தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கிடைக்கும் சிறு தூசு துரும்புகள் கலந்த தங்கக் குப்பைகளாகவோ கூட இருக்கலாம். ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் ஓடும் ஆற்று நீரில் இருந்து கூட தங்கத் துகள்களைத் தேடிப் பிரித்தெடுக்கிறார்கள். விஷயம் ஒன்று தான் மனிதர்களின் தீராத தங்க தாகம். 

அப்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் தங்க வயல்பகுயில் தங்கம் தேடித்திரிபவர்கள் பலருண்டு. ஏனெனில் அங்கே 1809 ஆம் ஆண்டு முதலே தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பலரும் தங்கத்துகள்கள் தேடி அங்கு அலைந்து திரிவதுண்டு. கையில் மெட்டல் டிடெக்டர் சகிதமாக பலர் அங்கே இப்படித்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அங்கே உப்புப் புதர்களுக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நெடுங்காலமாக மக்கள் நம்புகின்றனர். அங்கே தங்கத் துகள்கள் கிடைப்பது சகஜம் தானென்றாலும் கூட இப்படித் தங்கக் கட்டி கிடைப்பது அரிதான விஷயமே! அங்கு தங்கம் தேடி சுற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவருக்குத் தான் இப்போது இப்படியொரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. சுமார் 1.4 கிலோ கிராம் எடை கொண்ட பழங்காலப் பொற்கட்டி. பார்ப்பதற்கு கல் போல கெட்டியாக இருக்கிறது. இந்தத் தங்கக் கட்டியைக் கண்டெடுத்த தங்க வேட்டை மனிதன், இதன் மதிப்பை அறிவதற்காக மேற்கு ஆஸ்திரேலியாவின், கல்கூர்லியில் இருக்கும் தங்கமதிப்பீட்டுக் கடை ஒன்றை அணுகியிருக்கிறார். அங்கே இந்தத் தங்கக்கட்டியின் எடை, இன்றைய மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன.

சுமார் 1.4 கிலோகிராம் எடை கொண்ட இந்த தங்கக் கட்டியின் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு $99,000 AUD. யூரோப்பியன் டாலர் மதிப்பு $68,760. நம்மூர் ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக ரூ.48,00,000. அந்த லக்கி மேனின் பெயர் இன்னும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. ஆயினும் அவர் கண்டெடுத்த தங்கக் கட்டியை மதிப்பிட்ட ஆஸ்திரேலிய தங்க மதிப்பீட்டுக் கடை, இப்படியொரு அதிசயத்தை மதிப்பிட முதன்முதலாக தங்களை அணுகியதற்காக நன்றி தெரிவித்து அத்தகவலை முகநூலிலும் தற்போது பகிர்ந்துள்ளது. 

மேற்கு ஆஸ்திரேலியாவின் தங்கவயல் பகுதியில் பரவியுள்ள உப்புப் புதர்களுக்கு அடியில் சுமார் 18 இஞ்ச் ஆழத்தில் மெட்டல் டிடெக்டர் கொண்டு இதன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கே இது சகஜம் என்ற போதும் இது போன்ற மான்ஸ்டர் சைஸ் தங்கம் கிடைப்பது அரிது தான். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மற்றொரு தங்க வேட்டை மனிதருக்கு $80,000 மதிப்புள்ள தங்கக் கட்டி கிடைத்ததாகத் தகவல். முன்னதாக 2016 ஆம் ஆண்டிலும் கூட வேறொரு தங்க வேட்டைக்காரருக்கு $190,000 மதிப்பிலான தங்கக் கட்டி மெட்டல் டிடெக்டர் தேடுதல் வேட்டை மூலமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com