அடேயப்பா! திமிங்கலச் சாணி இவ்ளோ காஸ்ட்லியா? விற்பனை செய்ய முயன்ற மும்பை நபர் கைது!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 19th June 2019 11:37 AM | Last Updated : 19th June 2019 11:37 AM | அ+அ அ- |

திமிங்கல சாணி என்று சொல்லப்படக் கூடிய ஆம்பர்கிரீஸ் எனும் மெழுகுப் பொருள் விந்து திமிங்கலங்களின் குடல் பகுதியில் சுரக்கும் அபூர்வப் பொருட்களில் ஒன்று. வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதில் இது முக்கிய இடுபொருளாகப் பயன்படுத்தப்படுவதால் உலகம் முழுவதும் இதற்கான டிமாண்ட் அதிகம். அதனால் தான் விலையும் இத்தனை அதிகம்.
பொதுவாக வெப்பமண்டலக் கடல்களில் விந்து திமிங்கலங்களின் ஆசனவாயிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருளே இது. வெளியேற்றப்பட்ட உடனே சேகரிக்கப்பட்டால் இவற்றின் மணம் அத்தனை ரசிக்கத்தக்கதாக இருப்பதில்லை என்று கேள்வி. நாட்பட, நாட்பட கல்லைப் போன்று உறுதி கொண்டு நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கும் இக்கழிவுப்பொருட்களை பெர்ஃபியூம் தயாரிப்பு நிறுவனங்கள் சேகரித்துப் பயன்படுத்துவது வழக்கம். ஆம், அம்பர் கிரீஸை சேகரிக்கத்தான் முடியுமே தவிர இன்று வரை மனிதர்களால் செயற்கை முறையில் திமிங்கலங்களில் இருந்து பெற முடிவதில்லை என்பதே இதன் சிறப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
அதுமட்டுமல்ல கடற்கொள்ளையர்கள் மட்டும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மூலமாக விந்து திமிங்கலங்கள் கொல்லப்பட்டு அதன் குடல் பகுதியில் இருந்து அம்பர்கிரீஸ் எடுக்கும் முயற்சியும் அயல்நாடுகளில் முன்பு நடந்தேறியிருப்பதால் உலக நாடுகள் பலவற்றில் அம்பர்கிரீஸ் சேகரிப்பு தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகவும் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் விந்து திமிங்கலங்களில் அனைத்திலும் அம்பர்கிரீஸ் கிடைப்பதில்லை. 10 ல் ஒரு % விந்துதிமிங்கலங்கள் மட்டுமே அம்பர்கிரீஸை உற்பத்தி செய்யக்கூடியவையாக இருப்பது திமிங்கல வேட்டைக்காரர்களுக்குத் தெரிவதில்லை.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்தவரான ராகுல் துபாரே எனும் 53 வயது நபர் கடந்த சனிக்கிழமை அன்று, மும்பை புறநகர்ப்பகுதியில் இருக்கும் வித்யா விகார், காமா லேன் மார்கெட்டில் சுமார் 1.3 கிலோ கிராம் எடை கொண்ட 1.7 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸை விற்க முயற்சிக்கும் போது காவல்துறை மற்றும் வனத்துறை காவல் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார். ஏனெனில், இந்தியாவைப் பொருத்தவரை அம்பர்கிரீஸ் தற்போது தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ பொருட்களில் ஒன்று. எனவே தடைசெய்யப்பட்ட பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி விந்து திமிங்கலம் என்பது அருகி வரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலின் கீழ் வருகிறது. எனவே திமிங்கலங்களைக் காக்கும் முயற்சியில் இருக்கும் இந்திய அரசின் வனத்துறை, அவற்றிலிருந்து அம்பர்கிரீஸ் சேகரிப்பை தனி நபர் மேற்கொள்வதைத் தடை செய்திருக்கிறது.
பெர்ஃபியூம் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான இந்த அம்பர்கிரீஸ் ஆல்கஹால், குளோராஃபார்ம், ஈதர், மற்றும் பிற எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் பொருட்களில் கரையும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.