தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன?

நகை செய்யும் போது தங்கக்கட்டியை 24 காரட்டிலிருந்து 22 காரட்டாக மாற்ற வேண்டும். அதற்காக 1200 டிகிரி செண்டிகிரேட்டில் தங்கத்தை சூடு படுத்துகிறோம். அப்படி சூடு படுத்தும்போது தங்கத்தில் கொஞ்சம் ஆவியாகிறது
தங்க பிஸினஸில் ‘தொழில் ரகசியம்’ என்றால் என்ன?

இந்தக் கேள்வி ஜீ தமிழ் சேனலின் தமிழா தமிழா ரியாலிட்டி ஷோவில் ஒரு பெண்மணியால் கேட்கப்பட்டது. இதே கேள்வி நம்மில் பலருக்கும் இருப்பதால் நான் பார்த்ததை இங்கே பகிர்கிறேன்.
அவரது கேள்விக்குப் பதில் அளித்தார் ‘மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அசோசியேஸன்’ மெம்பரான பரத் சர்மா. அவரளித்த பதில் இதோ;

‘கோல்ட் ரேட் பார்த்தீர்கள் என்றால் அது  'ரா' கோல்டுக்கான விலை. அதாவது கட்டியாக வாங்கும் தங்கத்திற்கான விலை. அதிலிருந்து நாம் நகை செய்யும் போது தங்கக்கட்டியை 24 காரட்டிலிருந்து 22 காரட்டாக மாற்ற வேண்டும். அதற்காக 1200 டிகிரி செண்டிகிரேட்டில் தங்கத்தை சூடு படுத்துகிறோம். அப்படி சூடு படுத்தும்போது தங்கத்தில் கொஞ்சம் ஆவியாகிறது. அதே போல ஒரு தங்கக்கட்டியை ஆபரணமாக மாற்றும் போது ஆரம்பம் முதலே கணக்கிட்டால் முதலில் ஆவியாகும் தங்கத்தில் கொஞ்சம் சேதாரமாகும். பிறகு ஆபரணமாக்கும் போது மெஷின் கட்டிங்கில் கொஞ்சம் தூளாகும் தங்கம் மூலமாக கொஞ்சம் சேதாரம் ஆகும். இப்படி சேதாரம் ஆகும் தங்கத்தைத்தான் 10% முதல் 18% வரை சேதாரமாகக் கழிக்கிறார்கள். இந்த 10% வைத்து ஒரு நகைக்கடைக்காரர் பெரிய லாபம் பார்த்து விட முடியாது. இன்றைக்கு உலகத்தில் இருக்கும் அத்தனை தொழில்களையுமே எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வெளிப்படையான பிஸினஸ் நடப்பது தங்கத்தில் மட்டும் தான்.’

- என்கிறார் அவர்;

கேள்வி கேட்ட பெண்மணி அவரளித்த பதிலில் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. அவர் மேலும் ஒரு சந்தேகம் கேட்டார்.

ஆவியாகும் தங்கத்தை விடுங்கள், மெஷினில் கட் செய்யும் போது தூளாகும் தங்கத்தை சேதாரம் என்று எப்படி ஒப்புக் கொள்வது? அதுவும் தங்கம் தானே? என்றார்.

அதற்கு பரத் சர்மா, ‘எல்லாத் தொழில்களிலுமே ‘தொழில் ரகசியம்’ என்று ஒன்றிருக்கும் அம்மா, அதைப்பற்றி நான் பேசக்கூடாது’ என்று முடித்துக் கொண்டார்.

தங்கத்தில் பொற்கொல்லர்கள் பேணும் தொழில் ரகசியம் என்னவாக இருக்கும்? 

இன்று பாரம்பர்ய பொற்கொல்லர்களைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் கூட கோல்டு பிஸினஸில் இறங்கி விட்டன. அவர்களுக்கும் இந்த ரகசியமெல்லாம் அத்துப்படியா?

நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது இப்படிப் பல கேள்விகள் முளைத்தன.

தினமணி வாசகர்களில் நகைக்கடை அதிபர்களும் இருக்கலாம். பெருமளவில் நகை வாங்கிச் சேமிக்கும் நகை ஆர்வலர்களும் இருக்கலாம், சொத்து வாங்குவதைக் காட்டிலும் நகை வாங்குவதே சிறந்த முதலீடு என்று கருதுபவர்களும் இருக்கலாம். அவர்களில் ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட கேள்விக்குப் பதில் அளிக்கலாம்.

தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் தங்கம் சார்ந்த மேலும் பல கேள்விகளுடனும் காத்திருக்கிறோம்

தினமணி இணையதளக்குழு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com