மும்பை ‘தானே’ குடியிருப்புப் பகுதியில் மக்களுடன் மக்களாக மார்னிங் வாக் வந்த சிறுத்தைப்புலி!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 27th June 2019 12:41 PM | Last Updated : 27th June 2019 12:41 PM | அ+அ அ- |

வேறென்ன? காட்டு நிலங்களை வீட்டு நிலங்களாக அபகரித்தால் அப்புறம் சிறுத்தையுடன் தான் மார்னிங் வாக் போகனும்!
மும்பையை அடுத்துள்ள தானேயில், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைப்புலியொன்றின் நடமாட்டம் சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதாகத் தகவல்.
தானே... கோட்பந்தர் சாலையில் அமைந்திருக்கும் ஒவலா கிராமத்தில் உள்ள புல்பகாரு கார்டன் எனும் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைப்புலியொன்று நுழைந்திருக்கிறது. காலை 7 மணியளவில் அங்கிருந்த குடியிருப்புவாசிகளில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த இடத்தில் திடீரென சிறுத்தையைக் கண்டிருக்கிறார்கள்.
கண்டமாத்திரத்தில் அதிர்ச்சியானவர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்ததும், தகவல் அறிந்து அவர்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள்ளான சில நிமிட கால இடைவெளியில் சிறுத்தை அங்கிருந்த காம்பெளண்ட் சுவரைத் தாவிக் குதித்து காணாமல் போயுள்ளது.
ஆயினும், இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அவ்வப்போது அப்பகுதி மக்கள் புகார் அளிப்பது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஃபிப்ரவரி மாதத்தில், தானேயில் உள்ள கோரும் மால் எனும் ஷாப்பிங் மால் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகப் புகார் ஒன்று பதிவாகியிருந்தது. அப்போது சிறுத்தையை பிடிக்க விரைந்த வனத்துறையினரை ஏமாற்றி சிறுத்தை அங்கிருந்த சட்கர் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து விட்டது. பிறகு அங்கிருந்து தான் வனத்துறையினர் சிறுத்தையைப் பொறி வைத்துப் பிடித்துச் சென்றனர்.
Image Courtesy: Hindusthan times